பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

133

காந்தியடிகளின் தலைமையின்கீழ் நடந்த போராட்டம் இந்த நாவலில் வரவில்லை. போராட்டத்தின் கடைசி கட்டத்தில் நிகழ்ந்த, கல்கி சொல்கிற நாசகாரச் சக்திகளின் அசுரச் செயல்கள், கதையின் போக்கிலே வந்து கலக்கின்றன. எத்தனையோ இன்னல்களைப் பட்டு மனம் கலங்கிய சீதாவுக்கு மறுபடியும் அமைதியாக வாழும் வாழ்வு கிடைக்கிறது. பஞ்சாபில் ராகவன் உயர்ந்த உத்தியோகம் பெற்று அவளுடன் வாழ்கிறான். இந்த வாழ்வைக் குலைக்க இந்த அசுரச செயல்கள் - ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் — காரணமாகின்றன. கல்கி அந்த இடங்களிளெல்லாம் வகுப்புக் கலவரம் என்று வெளிப்படையாகச் சொல்லாமல் அசுர சக்திகளென்றும், அசுரர்களென்றும் எழுதுகிறார். வகுப்பிலும் சாதியிலுமா இருக்கிறது இந்தத் தீமை? ஆசுர சம்பத்துக்கள் மனத்தில் அல்லவா இருக்கின்றன?

கதையின் ஆரம்பம்

தையின் ஆரம்பம் காலையிளம் போதுபோல் மனோகரமாகத் தொடங்குகிறது. ராஜம் பேட்டையில் பட்டா மணியம் கிட்டாவையர் வீட்டில் அவரையும் அவர் மகள் லலிதாவையும் அவர் மனைவி சரஸ்வதியம்மாளையும் பார்க்கிறோம். பம்பாயிலுள்ள அவருடைய சகோதரி ராஜம்மா கடிதம் எழுதியிருக்கிறாள். கிட்டாவையர் அவளையும் அவள் பெண் சீதாவையும் அழைத்து வருகிறார். லலிதாவைப் பெண் பார்க்கச் சென்னையிலிருந்து ராகவன் தாய் தந்தையருடன் வருகிறான். தன்னுடைய பேச்சினால் எல்லாரையும் கவர்ந்துவிடும் சீதாவைத்தான் அவனுக்குப் பிடிக்கிறது. தன் கருத்தை அவன் சொன்னபோது சிறிது கலவரம் எழுகிறது. ஆனால் லலிதாவைத் தேவி பட்டணம் வக்கீல் குமாரனும், அவளுடைய சகோதரன்