பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3. கல்கியின் நாவல்கள்

137

மலர்வதற்கு முன் சமுதாய அமைப்பு அவர்களை இணைக்கத் தடையாக இருப்பதனால் பெண்மணி பிரிந்து, தன்னை மறக்கவழி செய்கிறாள், தான் இறந்ததாக எண்ணும்படி செய்து விடுகிறாள். அவனுடைய ஆடம்பர் வாழ்வும் அரசாங்க அலுவலும், தன்னுடைய தொண்டு மனப்பான்மையும் தியாக உணர்வும் ஒத்துவரா என்ற எண்ணமும் அவளை அவனிடமிருந்து விலகச் செய்கின்றன. பின்பு அவன் வேறு ஒருத்தியை மணந்து வாழும்போது, முன்னைக் காதலி உயிருடன் இருப்பதறிந்து அக்காதலுணர்ச்சியைத் தொடர விட முயல, அந்தப் பெண்மணி ஒத்துவராமல் இருக்கிறாள். ஊசலாடும் மனமுடையவனாகிய அவனது புறக்கணிப்புக்கு ஆளான அவன் மனைவி பல இன்னலுக்கு ஆளாகிறாள். ஆடவனது மன ஊசலாட்டத்துக்குப் பலியாகும் பேதைப் பெண் சீதாவின் கதை இது.

உரையாடல்கள்

நாவலுக்கும் நாடகத்துக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உண்டு. நாடகம் முழுவதும் பாத்திரங்களின் கூற்றுக்களாகவே இருக்கும். நாவலோ ஆசிரியன் சொல்லும் கதை. பாத்திரங்கள் தமக்குள்ளே உரையாடுவதாக அமைக்கும் உத்தியை நாவலாசிரியனும் ஆளாகிறான். இதனால் கதைக்கு உயிரூட்டம் உண்டாகிறது. நல்ல நாவாசிரியர்கள் எவ்வளவு அதிகமாக உரையாடல்களைச் சேர்க்கலாமோ அவ்வளவும் சேர்த்து நாடகத்தினால் வரும் இன்பத்தை உண்டாக்குகிறார்கள். மொழியின் தெளிவு சுளுவு அறிந்து சாமர்த்தியமாக எழுதினாலன்றி உரையாடலை அழகுபெற வைப்பது எளிதன்று. நீதி மன்றத்தில் கொடுக்கும் சாட்சிகளின் வாக்குமூலத்தைப் போலச் சம்பாஷணைகள் இருந்தால் ஆபத்தாகி விடும். ஒரு மனிதரை நிமிஷக் கணக்கில் பேசவிட்டால்