பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தமிழ் நாவல்

அது பல்லாயிரம் மக்களின் சோகம் நிறைந்த ஓலத்தை யொத்த அலையோசையாக இருக்கிறது (ப. 739). அவளை எடுத்துக் கரையேற்றுகிறார்கள். அதுமுதல் அவள் காதில் பயங்கரமான அலையோசை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறது; காதோ கேட்கும் சக்தியை அடியோடு இழந்துவிடுகிறது (ப. 742). காந்தியடிகளின் திருமேனி இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு நடக்கிறாள். அவள் காதில் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருக்கும் அலையோசை ஜனசமுத்திரத்தின் இரைச்சலோடு ஒன்றாகக் கலக்கிறது (ப. 753).

கூட்டத்திலே வழி தவறி அவள் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறாள். வானொலியின் மூலம், "ஹா! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக" என்ற பொருளுள்ள கீதம் வருகிறது. அது அவள் காதில் விழுகிறது. "ஆகா! இது என்ன? நமக்குக் காது கேட்கிறதே! பாட்டுக் கேட்க முடிகிறதே! இத்தனை நாள் கேட்ட அலை ஓசை" எங்கே போயிற்று? அந்த இடைவிடாத பயங்கரச் சத்தம் எப்படி மறைந்தது? காந்தி அடிகளே! கருணாநிதியே! தங்களுடைய மரணத்திலே எனக்கு வாழ்வு அளித்தீர்களோ!" என்று உணர்ச்சி வசப்பட்டு உருகுகிறாள் (ப. 756). அதோடு சரி. அப்பால் அலையோசையை அவள் கேட்கவில்லை. அவள் அதற்குமேல் அதிக நாள், வாழ்ந்திருக்கவில்லை.

இவ்வாறு அலையோசையைச் சோக கீதத்தின் பல்லவியாக வைத்து ஆசிரியர் நாவலில் புகுத்தி யிருக்கிறார். அந்தப் பெயரையே நாவலுக்கும் கொடுத்திருக்கிறார்.

முதலும் முடிவும்

நாவலின் ஆரம்பமும் முடிவும் ஒருவகையில் ஒத்திருப்பது ஓர் அழகு. அலையோசையில் அந்த அழகைப்