பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தமிழ் நாவல்


சூரியா சொல்கிறான். அவன் தாய் சரஸ்வதி அம்மாள், “நான் கண் மூடும் வரையில் பொறுத்திருங்கள். அப்புறம் எது வேணுமானாலும் செய்யுங்கள்” என்கிறாள். அதற்குப் பதிலாகச் சூரியா பேசும்போதுதான், “நாங்கள் காத்திருக்கலாம் அம்மா! ஆனால் பூகம்பமும் புயலும் எரிமலையும் பிரளயமும் காத்திருக்குமா?” என்று கேட்கிறான் (ப, 795); அதில் பூகம்பம் வருகிறது. முன்பு கிட்டா வையர் பூகம்பத்தைச் சொன்னார்; இப்போது அவர் பிள்ளை சொல்லுகிறான்; இது தான் வேறுபாடு.

சீதாவின் காதில் கேட்ட அலையோசை காந்தியடிகளின் புனித உடலம் தகனமான அன்று நின்று, அவள் காது சரியாகக் கேட்கத்தொடங்கியதற்குச் சூரியா ஒரு வியாக்கியானம் செய்கிறான்: “‘ஹரி! மக்களின் துன்பத்தைப் போக்குவாயாக’ என்ற மகாத்மாவின் மனத்துக்கு உகந்த கீதந்தான் முதல் முதலில் அவள் காதில் கேட்டதாம். இதில் ஒரு சுப சூசகம் என்று எனக்குத் தோன்றுகிறது. மகாத்மாவின் மகா தியாகத்துக்குப் பிறகு இந்தப் பெரிய தேசத்துக்குப் பெரும் விபத்து ஒன்றும் கிடையாது. இனிமேல் சுபிட்சமும் முன்னேற்றமுந்தான்” என்கிறான் சூரியா (ப, 796).

அந்தத் தேச பக்தத் தியாகியின் விருப்பம் நிறைவேறுமாக!

இவ்வாறு மகாத்மாவின் புனித நினைவோடு கதையை முடிக்கிறார் கல்கி.