பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4. பின்னுரை

துகாறும் பொதுவாகத் தமிழ் நாவல்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் பற்றி ஒருநாளும், சிறப்பாகச் சென்ற நூற்றாண்டின் இறுதியில் தோற்றிய மூன்று நாவல்களைப் பற்றி ஒருநாளும், கல்கியின் சரித்திர நாவல் ஒன்று. சமூக நாவல் ஒன்று ஆகியவற்றைப் பற்றி ஒருநாளும் பேசினேன்.

குடும்ப நாவலும் சமூக நாவலும்

குடும்ப நாவல், சமூக நாவல், சரித்திர நாவல் என்று தமிழில் இப்போது வந்துள்ள நாவல்களைப் பிரித்துப் பார்க்கலாம். பெண்மணிகள் பலர் இப்போது நல்ல நாவல்களை எழுதி வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் குடும்ப நாவல்களையே எழுதி வருகிறார்கள். மேல் நாடுகளில் குடும்பத்தில் உள்ள ஒட்டுறவுக்கும் கீழை நாடுகளில் குடும்பத்திலுள்ள ஒட்டுறவுக்கும் வேறுபாடு உண்டு. இந்தியாவிலோ குடும்பப் பிணைப்பு மிக மிக இறுகியது. குடும்பம் விரிந்து குலமாகி, அது விரிந்து சாதியாகிய நிலையை இந்த நாட்டில் பார்க்கிறோம். அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை முதலிய உறவு முறைப் பெயர்களோடு சிற்றன்னை, சிற்றப்பா, சிறுதாயார், அண்ணி, கொழுந்தன், மைத்துனி, நாத்தனார் முதலிய பல்வேறு உறவுப் பெயர்களை நாம் கேட்கிறோம். இவையாவும் உறவினர்களோடு ஒட்டிப் பழகும் வழக்கத்தைப் புலப்படுத்துகின்றன. ஆங்கிலத்தில் மாமனுக்கும் சிற்றப்பனுக்கும் ஒரே பெயர்; மாமன் மகன், அத்தை மகன், சிற்றப்பன் மகன் எல்லோருக்கும் ஒரே பெயர்.