பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழ் நாவல்

தமிழிலோ வெவ்வேறு உறவுக்கு வெவ்வேறு பெயர்கள் இருக்கின்றன. கூட்டுக் குடும்ப வாழ்வு இந்த நாட்டில் வேரூன்றியிருக்கிறது. அதனால் ஒரு குடும்பமே ஒரு சிறிய அரசாங்கத்தைப் போல இருக்கும். “குடித்தனமோ துரைத்தனமோ” என்ற பழமொழியும் அதனைக் குறிப்பிக்கிறது.

ஆகவே, சமுதாயத்தின் உறுப்பாகிய குடும்பத்தில் பலபல நிகழ்ச்சிகளும் பலபல எண்ண வேறுபாடுகளும் அவற்றால் உண்டாகும் சிக்கல்களும் மோதல்களும் இருக்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தை நிலைக்கனமாகக் கொண்டு எழுதும் நாவல்களுக்குக் கதையில் வேகமும் ஆர்வமும் உண்டாக்குவதற்குரிய நிகழ்ச்சிகள் மிகுதியாக இருக்கின்றன. அதனால் தான் இங்கே பலர் குடும்ப நாவல்களை எழுதுகிறார்கள். குடும்பத்தின் எல்லைக்குள்ளே அடங்கிய நிகழ்ச்சிகளை முக்கியமாக வைத்து எழுதும் நாவல்களையே குடும்ப நாவல் என்று சொல்கிறேன். இந்த நாட்டுக் குடும்பம், நாவலுக்கு ஏற்ற கருவைத் தருவது.

குடும்ப நிகழ்ச்சிகள் விரிந்து பலவேறு குடும்பங்களின் தொடர்பும், ஊராருடைய நன்மை தீமைகளின் இயையும், சமுதாயத்தில் உண்டாகும் பொது நிகழ்ச்சிகளின் இணைப்பும் உடையதாகக் கதை விரிந்தால் அது சமூக நாவல் ஆகிவிடுகிறது. கமலாம்பாள் சரித்திரத்தைக் குடும்ப நாவல் என்றும், அலையோசையைச் சமூக நாவல் என்றும் கூறலாம். ஒட்டுறவுள்ள குடும்பப் பாத்திரங்களையே வைத்து அவற்றின் சொல்லையும் செயல்களையும் கொண்டு பின்னியது கமலாம்பாள் சரித்திரம். பல்வேறு ஊர் நிகழ்ச்சிகளையும், நாடு முழுவதும் உண்டான இயக்கங்களையும் நிலைக்களமாகக் கொண்டு இயங்குவது அலையோசை; அது சமூக நாவல்