பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னுரை

149

 சமூக நாவலைச் சீர்திருத்த மனப்பாங்கும், நாட்டில் நிகழும் இயக்கங்களில் பற்றும், அவற்றைப் பற்றிய அறிவும் உடையவர்கள் எழுதுகிறார்கள். குடும்ப நாவலில் புற நிகழ்ச்சிகளை விட மன இயலைப் பொறுத்த உள் நிகழ்ச்சிகள் மிகுதியாக இருக்கும். சமூக நாவல்களிலோ இரண்டும் இருக்கின்றன. குடும்ப நாவல்களில் வெவ்வேறு சூழ்நிலைகளும் நில வேறுபாடுகளும் மிகுதியாக இல்லா விட்டாலும் வெவ்வேறு மனப்பாங்கும் அதனால் விளையும் சிக்கல்களும் இருக்கும். அவற்றில் வரும் பாத்திரங்கள் முழு உருவுடன் நாம் பழகியறிந்த மக்களை நினைப்பூட்டு வனவாக இருக்கும். சமூக நாவல்களில் பல சமூகங்களின் கலப்பும் மோதலும் பொது மக்களின் இயக்கங்களால் விளையும் எழுச்சிகளும் வீழ்ச்சிகளும் இடங்கொள்ளும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் இயல்பும், குறிப்பிட்ட இயக்கத்தின் போக்கும் அத்தகைய நாவல்களில் உருப்பெற்றுத் தோன்றும். குடும்ப நாவல் ஆழமுடையது என்றால் சமூக நாவல் விரிவுடையது எனலாம். இந்த வேறுபட்டால் நாவலின் இலக்கிய மதிப்பில் உயர்வு தாழ்வு எழுவதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையது.

பத்திரிகைகளும் நாவல்களும்

தமிழ் நாட்டில் பத்திரிகைகளே நாவல்களின் வளர்ச்சிக்கு ஊட்டம் அனித்து வருகின்றன. அவ்வப்போது பரிசுகளை அளித்து நாவல்களை எழுதுபவர்களிடம் ஊக்கத்தைத் தூண்டி விடுகின்றன. இதன் பயனாகப் பல புதிய எழுத்தாளர்கள் தோன்றித் தமிழ் மக்களின் மதிப்புக்கு உரியவர்களாகி யிருக்கிறார்கள். பரிசுக்காக எழுதுகிறவர்கள் நாவல் முழுவதையும் எழுதி விடுகிறார்கள். தொடர் கதையாக எழுதுகிறவர்கள் அவ்வப்போது எழுதித் தருகிறார்கள். எல்லாப் பத்திரிகைகளிலும் நாவல்கள்