பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பின்னுரை

151


வருங்காலத்துத் திறனாய்வாளர்கள் புறத்தே நின்று பார்க்கும் போது உண்மையான மதிப்பை வெளியிடக் கூடும். இன்று மிகமிகப் பாராட்டிப் பேசும் நாவல் நாளடைவில் மக்களின் மனத்தை விட்டு அகன்று போகும் வாய்ப்பும் இருக்கிறது.

எனவே, இப்போது உயிரோடுள்ளவர்களின் நாவல்களைப் பற்றிய என் கருத்துக்களை இந்தச் சொற்பொழிவுகளில் வெளியிடவில்லை நாவல்களின் பெயர்களையும் ஆசிரியர்களின் பெயர்களையும் ஒருவகையாகத் தெரிவிக்கலாம் என்றால், யாரைச் சொல்வது, யாரை விடுவது என்ற சிக்கல் எழும். எல்லாரையும் சொல்லி ஒரு பட்டியலாகக் கொடுப்பதில் பயன் யாதும் இல்லை. ஆகவே அவர்களைப்பற்றி ஒன்றுமே சொல்லாமல் இருந்து விட்டேன்.

இந்தத் துறையில் இன்னும் விரிந்த ஆராய்ச்சி செய்வது இன்றியமையாதது. இன்னும் தரம் உயர்ந்த நாவல்கள் மிகுதியாக வரவில்லை என்பதனால் ஆராய்ச்சி தடைபட வேண்டியதில்லை. பரிவும் நேர்மையும் இலக்கியத்தில் ஈடுபடும் மனப்பாங்கும் உடைய திறனாய்வாளர்களுக்கு இந்தத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய புலம் இருக்கிறது. வருங்காலத் தமிழ் எழுத்தாளர்கள் அத்தகைய ஆராய்ச்சி நூல்களை எழுதுவார்கள் என்றே நம்புகிறேன்.

முற்றும்