பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

3


இருக்கும். கதையிலுள்ள இரகசியம், அடுத்தபடி என்ன வரும் என்ற ஆவலைத் தூண்டிக் கேட்கச் செய்யும். மர்மம் தெளிவாகிச் சுவாரசியம் குறையும் போது கேட்பவர்கள் தூங்கி விடுவார்கள்; அல்லது கதை விரைவில் நின்றதற்காகக் கதை சொன்னவனைக் கொன்றுவிடுவார்களாம். இதனை இ. எம், ஃபார்ஸ்டர் சொல்கிறார்.[1]

கதைகளில் அதிசயமும் அற்புதமும் கலந்திருந்தமையால் . கேட்ட மக்களுக்கு ஆர்வம் அதிகமாயிற்று, நாள்தோறும் நாம் காணுகிற வாழ்வுக்குப் புறம்பாக, நம்முடைய வாழ்வினும் வளம் பெற்றதாக இருப்பதைக் கேட்கும் போது ஒரு கிளுகிளுப்பு உண்டாயிற்று. அதனால் பழங்காலக் கதைகள் பெரும்பாலும், "ஒரே ஓர் ஊரிலே ஒரே ஒரு ராஜா. அவனுக்கு ஒரு மனைவி. அவள் தான் பட்டத்து ராணி" என்று ஆரம்பித்தன. எல்லோரும் அரசர்களாவதில்லை. அந்தக் கால எண்ணத்தின்படி அரசன் எல்லாரினும் உயர்க்தவன்; எல்லாரைக் காட்டிலும் ஆற்றலுடையவன்; எல்லாரையும்விட அதிக இன்பம் அனுபவிக்கிறவன். நம்மிடம் இல்லாத சிறந்த குணங்களும் ஆற்றலும் அவனிடம் இருந்தன. நமக்கு எவை எவை கிடைக்கவில்லையோ, நாம் எவற்றிற்காக ஏங்கி நிற்கிறோமோ, அவை. அவனிடம் நிரம்ப இருந்தன. அத்தகையவனுடைய கதையைக் கேட்பவர்கள், அந்தக் கதையோடு ஒன்றிச் சில கணம் அந்த அரசனே ஆக்கி விடுவார்கள். இனிய கனவு கண்டவர்களைப் போல நனவில் நுகர இயலாத இன்பங்களை நுகர்ந்தது போன்ற திருப்தி அவர்களுக்கு உண்டாயிற்று. இந்தத் திருப்தியே, இந்தப் போலி மன நிறைவே, கதைகளைக் கேட்கும் ஆவலைத் தூண்டியது; கேட்பவர்கள் இருந்ததனால் சொல்பவர்களுக்கும் கற்பனை செய்து சொல்லும் அவசியம் உண்டாயிற்று.


  1. 1, E. M. Forster: Aspects of the Novel, p. 41.