பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழ் நாவல்


தொல்காப்பியத்தில்

வாய்மொழியாகப் பல கதைகள் உலவி வந்தன என்று சொன்னேன். அந்தக் கதைகள் புலவர்களின் கவனத்துக்கும் வந்தன என்று தெரிகிறது. ஆம்; மிகப் பழைய காலத்தில்--அதாவது சற்றேறக்குறைய மூவாயிரம் ஆண்டு களுக்கு முன்பே-வாய்மொழியாகக் கதை சொல்வதைப் பற்றியும் அவற்றிற் சில இலக்கிய வடிவம் பெற்றன என்பது பற்றியும் தொல்காப்பியரே சொல்லியிருக்கிறார் எதற்கும் தொல்காப்பியரைச் சாட்சிக்கு அழைக்காவிட்டால் தமிழ்ப் புலவர்களுக்குத் திருப்தி இராது என்று யாரோ சொல்வது கேட்கிறது. சொல்லட்டும். சொல்லட்டும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் நாட்டிலும் மனிதர்கள் கதை சொல்லி வாழ்ந்தார்கள் என்று நான் சும்மா சொல்வதைவிட, அந்தக் காலத்து மனிதர் ஒருவரையே அழைத்துக் கொண்டு வந்து. உங்கள் முன் வீட்டு, 'உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லும் ஐயா' என்று சொன்னால், நீங்கள் கேட்க மாட்டோம் என்ற சொல்வீர்கள்? மொகெஞ்சதரோவில் கிடைக்கும் உடைசல் பண்டம் ஒன்றை எடுத்துப் பாதுகாத்து, இதோ இது பழைய சரித்திரத்தைச் சொல்கிறது, கேளுங்கள் என்று சரித்திர ஆராய்ச்சிக்காரர்கள் சொன்னால் நாம் பார்க்கவும் கேட்கவும் தயாராக இருக்கிறோமே, விள்ளாமல் விரியாமல் ஒரு முழு நூலே - தொல்காப்பியர் தந்த உயர்ந்த இலக்கண நூலே - பழங்கால இலக்கியத் துறைகளையும் அவற்றின் ஒழுங்குகளையும் நாம் தெரிந்து கொள்ளும்படி கிடைக்கிறதென்றால், அதைப் பார்த்துப் பயன் கொள்வது. நம்முடைய கடமை, நம் பெருமை என்று சொல்வதில் என்ன தவறு ஆகவே, தொல்காப்பியர் சொல்வதைப் பார்ப்போம்.