பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தமிழ் நாவல்


"பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழி" என்பதற்கு ஒரு பொருள் இன்றிப் பொய்படத் தொடர்ந்து சொல்லுவன, அவை: 'ஓர் யானையும் குரீஇயும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று அவற்றுக்கு இயையாப் பொருள்படத் தொடர் நிலையான் ஒருவனுழை ஒருவன் கற்று வரலாற்று முறையான் வருகின்றன' என்றும், “பொருளொடு புணர்ந்த நகை மொழி" என்பதற்கு, 'பொய்யெனப் படாது மெய்யெனப் பட்டும் நகுதற்கு ஏதுவாகும். தொடர் நிலை; அதுவும் உரையெனப்படும். அவையாவன: , சிறு குரீஇயுரையும், தந்திர வாக்கியமும் போல்வன எனக் கொள்க. இவற்றுள் சொல்லப்படும் பொருள் பொய்யெனப்படாது உலகியலாகிய நகை தோற்றும் என்பது என்றும் பேராசிரியர் உரை எழுதினார். இவ்விரண்டும் செவிலிக் குரியன என்பதைச் சொல்லும் சூத்திர உரையில், 'தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்தும் நகுவித்தும் பொழுது போக்குதற்குரிய ரென்பது இதன் கருத்து. இக்கருத்தே பற்றிப் பிற் சான்றோரும், "செம்முது செவிலியர் பொய்ந் நொடி பகர" என்றார் என்பது' என்று எழுதினார்.

தலைவனுடைய பிரிவால் வருந்தி அவன் வரவு பார்த்திருக்கும் தலைவிக்குச் செவிலித் தாய்மார் அவளுடைய கவனத்தைத் திருப்ப இத்தகைய கதைகளைச் சொல்வது வழக்கமென்பது. இலக்கியங்களால் தெரிய வரும் செய்தி. நெடுநல்வாடையில்வரும் பாண்டியன் நெடுஞ்செழியனுடைய மனைவி, போர்க்களத்திற்குச் சென்றிருக்கும் அப் பாண்டியனது பிரிவினால் வருந்தும் பொழுது, அவளுக்கு, அத்துன்பம் தோன்றாதபடி செவிலித்தாயர் இத்தகைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்களாம்.