பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தமிழ் நாவல்

போக்கும் கடமையும் கடவுள் உணர்வினின்றும் விலகி நிற்கவில்லை.

ஆதலின் பாரத சமுதாயத்துப் பழங் கதைகளில் கடவுள் கதாநாயகராக வந்தார். கடவுளுடைய வீரச் செயல்களும் அருஞ் செயல்களும் கதை வடிவம் பெற்றன. மற்ற நாடுகளிலும் இத்தகைய புராணக் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் அங்கெல்லாம் அவை ஒரு குறிப்பிட்ட பழங்கால எல்லையோடு நின்றுவிட்டன. அந்த எல்லைக்குப் பின்பு அத்தகைய கதைகளைப் படைப்பார் இல்லை; பழங்கதைகளைக் கேட்பார் மட்டும் இருந்தனர்; நாளடைவில் கேட்பவரும் வரவரக் குறைந்து போயினர். அவர்களுக்குக் கதை கேட்கும் ஆவல் குறையவில்லை. அந்தப் புராணக் கதைகளைக் கேட்கும் ஆவல் அவர்களிடம் இல்லாமற் போயிற்று; அவ்வளவு தான்.

இந்த நாட்டின் இயல்பு எப்படி இருக்கிறது? இராமாயணக் கதையை முதல் முதலில் இயற்றியவர் வால்மீகி முனிவர். ஆனால் அந்தக் கதையை எடுத்துச் சொன்னவர்கள். லவ குசர்களாகிய இரண்டு குழந்தைகள். அவற்றைக் கேட்டவர்களுள் இராமரும் ஒருவர். அன்று தம் கதையைக் கேட்டுத் தம்மை மறந்து நின்ற இராமர் முதல் இன்று இந்த இருபதாவது நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் அற்புத ஆற்றலால் விளைந்த பல வசதிகளைக் கண்கூடாக அநுபவித்து வரும் நம்வரையில் அந்தக் கதையைக் கேட்டுக்கொண்டு வருகிறது மனித சமூகம். இனியும் கேட்டுவரும் என்பதில் ஐயம் இல்லை. வடமொழியாகக் கேட்ட இராம கதையை வெவ்வேறு மொழிகளிலும் வெவ்வேறு கவிஞர்கள் காப்பியமாக்கித் தரப் பாரத மக்கள் கேட்டு அனுபவிக்கிறார்கள். கதையாகக் கேட்கிறார்கள். காலக்ஷேபமாகக் கேட்கிறார்கள்;