பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

தமிழ் நாவல்

கதைகள் தமிழ் நாடெங்குமே பரவி வழங்கின. அந்தக் கதைகளை மக்கள் கேட்டுச் சுவைத்தார்கள். மதுரைப் பெருமானுடைய திருவிளையாடல்களைத் தமிழ்நாட்டு மக்கள் எப்படிச் சுவைத்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தால் இந்த உண்மை புலனாகும்.

கதையைக் கேட்டு இன்புறும் ஆவலை இந்தப் புராணக் கதைகளைக் கேட்டுத் தமிழ் மக்கள் ஆற்றிக்கொண்டார்கள். புலவர்கள் தம் கவியாற்றலையும் கற்பனைத் திறனையும் புராணம் பாடுவதில் ஈடுபடுத்தினார்கள். புதிய புதிய புராணங்களைப் பாடினார்கள். அவர்களுடைய மதிப்பு உயர்ந்து வந்தது. குட்டைகள் தீர்த்தமாயின. ஊற்றுக்கள் ஆறுகளாயின, சரித்திரம் காணாத பாண்டியர்களும், சோழர்களும், வர்மர்களும் புராணக் கதைகளில் உலவினார்கள். நல்லவர்கள் இறுதியில் நன்மை அடைவதும் பொல்லாதவர்கள் துன்பம் அடைவதும் அடிப்படைச் சுருதியாக இந்தக் கதைகளில் இருந்தன. "அறம் வெல்லும் பாவம் தோற்கும்" என்பது தானே பழங்காலக் காப்பியங்களின் அடிப்படையான நீதி?

இதை நான் இங்கே எதற்காகக் கூறுகிறேன் என்று கேட்பீர்கள். தமிழர்களுக்குக் கதை சொல்லுவதிலும் கதை கேட்பதிலும் உள்ள ஆர்வம் எப்படிப் பிற்காலத்தில் புராணக் கதைகளின் வளர்ச்சிக்குக் காரணமாயின் என்பதைக் காட்டுவதற்காகவே இதைச் சொன்னேன். ஏழாவது நூற்றாண்டு தொடங்கித் தமிழ் மக்களுடைய வாழ்வில் ஒரு புதிய சமய எழுச்சி ஏற்பட்டது. சைவம் வைணவம் என்ற இரண்டு சமயங்களும் இந்த நாட்டின் வாழ்க்கையாகவே இணைந்தன என்றால் தவறு இல்லை. வாழ்க்கையில் சமயம் இருந்தது என்பதைவிடச் சமயத்தில் வாழ்க்கை நிலவியது என்று சொல்வதே பொருத்தம்.