பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

13


தமிழர்களுடைய இசைக் கலையும், நடனக் கலையும் சிற்பக் கலையும், கட்டிடக் கலையும் கோயில்களில் பொலிவு பெற்றன. அவர்களுடைய சமையற்கலைகூடக் கோயிலின் திருமடைப்பள்ளிகளிலே வளர்ந்தது என்றால் அது நகைச் சுவைதரும் செய்தியாகத் தோற்றலாம். ஆனால் அது எத்தனை உண்மை என்பது சொக்கர் அப்பம், சட்டி அரவணை முதலியவற்றின் பெயரமைதியே காட்டும். கலையும் தொழிலும் கோயிலை மையமாக வைத்துப்படர்ந்தன என்றால் இலக்கியமும் பொழுது போக்கும் அதனையே சார்ந்து நின்றதில் வியப்பு ஒன்றும் இல்லை. தலங்களைப் பற்றிய புராணங்களும் பிரபந்தங்களும் எழுந்தன. ஒரே தலத்தைப் பற்றிப் பல புராணங்கள் உண்டாயின. அந்தப் புராணங்களில் வராத பல வேறு கதைகள் இன்னும் அங்கங்கே வழங்குகின்றன, சீதை வந்து குளித்த இடங்களும், மஞ்சள் அரைத்துப் பூசிக்கொண்ட இடங்களும், வீமன் வந்து போர் புரிந்த இடங்களும், பஞ்சபாண்டவர்கள் படுத்து உறங்கின இடங்களும் தமிழ் நாட்டில் ஒன்றல்ல இரண்டல்ல; நூறு நூறு. அவற்றோடு சார்ந்த கதைகளும் பல நூறு. அவற்றைப் புராணத்திலே காணமுடியாது; வாய் மொழிக் கதைகளிலே கேட்கலாம். பலவகையான கற்பனைகளும், அறம் வென்று பாவம் தோற்கும் முடிவுகளும் அந்தக் கதைகளில் உண்டு.

உண்மையான நிகழ்ச்சிகளை விட இந்தக் கற்பனை நிகழ்ச்சிகளுக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. அதன் பயனாகக் கடவுளைப்பற்றி வழங்கிய புராணங்களைப் போலவே உண்மையில் வாழ்ந்த மக்களைப்பற்றியும் பல கற்பனைக் கதைகள் தோன்றின. எது வரலாற்று உண்மை, எது கற்பனைக் கதை என்று வேறு பிரித்துப் பார்க்க ஒண்ணாத நிலை ஆராய்ச்சிக்காரர்களுக்கு ஏற்படும் வகையில் அவை பின்னிப் பிணைந்தன. சாமானிய மனிதனால் செய்ய முடியாத தெய்விகச் செயல்களை, அற்புதங்களை, கடவுள் செய்தார்