பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தமிழ் நாவல்

நூல்களை எழுதினார். அவிவேக பூரண குரு கதை என் நகைச்சுவைக் கதையையும் எழுதினார்.

தமிழில் உரை நடை வளர வழி வகுத்துக் கொடுத்தவர்கள் பாதிரிமார்களே. முதல் பத்திரிகையை வெளியிட்டவர்கள் அவர்களே. [1]பிறகு இந்த நாட்டில் தமிழ் உரை நடையில் பலர் எழுதத் தொடங்கினார்கள். ஆங்கிலத்தில் உள்ளவை போன்ற நூல்கள் தமிழிலும் வரவேண்டும் என்று முனைந்து பல படைப்புக்களைப் படைத்தார்கள். அந்த வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாடபுத்தகங்களும் நீதிக் கதைகளும் நாவல்களும் எழுந்தன. அச்சியந்திரம் வந்ததனால் இத்தகைய புத்தகங்களை வெளியிடும் வாய்ப்புக் கிடைத்தது. ஓலையும் எழுத்தாணியம் பரணிலே புகுந்துகொள்ளக் காகிதமும் பேனாவும் நடமாடத் தொடங்கின. நூல்களை இயற்றிய புலவர்கள் அவற்றை இப்பொழுது எழுதலானார்கள்.

ஆங்கிலத்தில் 18-ஆவது நூற்றாண்டிலே நாவல் உதயமாயிற்று.[2] அதற்கு முன்பு வழங்கிய இடைக்காலத்து அரசகுடும்பத்தைப் பற்றிய நெடுங்கதைகள், 16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலத்தில் எழுந்த கதைகள் ஆகியவை அந்த நாவல் உதயமாவதற்குத் தூண்டுகோலாக இருந்தன.[3] அவ்வாறு தோன்றிய ஆங்கில நாவல் பத்தொன்பதாவது நூற்றாண்டில் வளமும் உரமும் பெற்றது. பிறகு இந்த நூற்றாண்டில் பல பல வகைகளைப் பெற்று வளர்ந்து கொண்டே இருக்கிறது.


  1. தமிழ்ப்பத்திரிகை (1831) என்பது முதல் முதலில் வந்த திங்கள் இதழ். அதை வெளியிட்டவர்கள் கிறிஸ்துவ மதப் பிரசாரகர்கள். மயிலை, சீனி. வேங்கடசாமி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் - இலக்கியம், ப. 134.
  2. Robert Liddel: A Treatise on the Novel, p.17; Arnold Kettlers; An Introduction to the English Novel, Vol. I. p. 27
  3. Ibid, p. 27.