பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

3


முதல் தமிழ் நாவல்

மிழில் முதல் முதலாகத் தோன்றிய நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். அதை 1876-ஆம் ஆண்டில் மாயூரத்தில் முன்சீப்பாக இருந்த வேதநாயகம்பிள்ளை எழுதினார். அவர் ஆங்கிலம் நன்றாகப் படித்தவர். தமிழிலும் இலக்கண இலக்கியப் புலமை உடையவர். திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் சில காலம் பாடம் கேட்டவர். செய்யுள் இயற்றும் திறம் படைத்தவர். நீதிநூல் என்னும் செய்யுள் நூலும், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் என்னும் இசையிலக்கியமும் அவருடைய கவித் திறமைக்குச் சான்று பகர்வன. அவர் அவ்வப்போது பாடிய தனிப் பாடல்கள் பல. அந்தப் பாடல்களில் தெளிவும், இன்ன கருத்தைச் சொல்கிறார் எனபன்தப் புலப்படுத்தும் திறனும், விநோதப் பண்பும் இருக்கும். பிள்ளையவர்களின் மற்றொரு மாணாக்கராகிய வித்துவான் தியாகராச செட்டியார், "அவருடைய பாடல்களில் விவகார ஞானம் நன்றாக இருக்கிறது" என்று சொல்வாராம். பாட்டில் வரும் கற்பனைகளோ நியாயமோ நம்முடைய அறிவுக்குப் பொருத்தமாகத் தோன்றும்படி அமைந்திருக்குமென்பது அவருடைய கருத்து. நீதிபதியாக இருந்தமையால் சட்ட ஞானமும், வக்கீல்கள் வாதிடும் முறையும், அவற்றை - நடு நிலையில் நின்று பார்க்கும் தெளிவும் அவரிடம் இருந்திருக்க வேண்டும்.

அவர் ஆங்கில நாவல்களைப் படித்து அவற்றைப் போலத் தாமும் எழுத வேண்டும் என்ற விருப்பம் கொண்டார்.

அசாதாரணமான நிகழ்ச்சிகளும் அற்புதங்களும் நிரம்பிய தொடர்நிலைக் கதைகளை ரொமான்ஸ் என்றும், சாமானிய மனிதப் பண்புகளையும் நிகழ்ச்சிகளையும் கொண்டு

2