பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. பொது வரலாறு

19

நாவலை எழுதலானார். மக்களுக்கு நீதி புகட்ட வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு மேலோங்கி நின்றது. நீதி நூலை எழுதியவர் அல்லவா? பிரதாப முதலியார் சரித்திரத்துக்கு அவர் எழுதிய முன்னுரையில் இதை எடுத்தவுடனே சொல்கிறார்; 'தமிழில் உரை நடை நூல்கள் இல்லையென்பதை ஒப்புக்கொள்கிறார்கள். இந்தக் குறை பாட்டைப்பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக் குறையை நீக்கும் நோக்கத்துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன்; மேலும் நீதி நூல், பெண்மதி மாலை, சர்வசமய சமரசக் கீர்த்தனம் முதலிய முன்பே வெளி வந்துள்ள என் நூல்களில் குறிப்பிட்டுள்ள அறநெறிக்' கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும் இந்த நாவலை எழுதலானேன்' என்கிறார்.[1]

இத்தகைய நாவலை எழுதும் தகுதி தமக்கு உண்டென்பதை மறைமுகமாக, நாவலுக்குள்ளே வரும் ஒரு பகுதியில் இவர் தெரிவிக்கிறார். 'இங்கிலீஷ், பிரான்சு முதலிய பாஷைகளைப் போலத் தமிழில் வசனகாவியங்கள் இல்லாமல் இருப்பது பெருங். குறைவென்பதை நாம் ஒப்புக்கொள்ளுகிறோம். அந்தக் குறைவைப் பரிகரிப்பதற்காகத்தான் எல்லாரும் ராஜ பாஷைகளும் தமிழும் கலந்து படிக்க வேண்டுமென்று விரும்புகிறோம். ராஜ பாஷைகளும் சுதேச பாஷைகளும் நன்றாக உணர்ந்தவர்கள் மட்டும் உத்தமமான வசன. காவியங்களை எழுதக்கூடுமே யல்லாது இதரர்கள் எழுதக்கூடுமா? வசன காவியங்களால் ஜனங்கள் திருந்த வேண்டுமே யல்லாது, செய்யுட்களைப் படித்துத் திருந்துவது அசாத்தியம் அல்லவா? ஐரோப்பிய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல் இருக்குமானால் அந்தத் தேசங்கள் நாகரிகமும் நற்பாங்கும் அடைந்திருக்கக்கூடுமா?. அப்படியே. நம்முடைய சுய பாஷைகளில் வசன காவியங்கள் இல்லாமல்


  1. பிரதாய முதலியார் சரித்திரம், முகவுரை, ப. 9.