பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழ் நாவல்

என்னும் பெயர் தாங்கிய இந்த நூலை ஏதேனும் ஒரு வழியிலே பெற்றுக் கையில் ஏந்திக் கொண்டிருக்கும் அன்பர்கள், இது அபாரமான புத்தகம் என்று உடனே தீர்மானித்துவிடக் கூடும். ஆயிரத்துக்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகம் அல்லவா? அதற்குத் தகுந்த கனமும் இருக்கத்தானே செய்யும்? இவ்வளவு பாரத்தையும் ஏறக் குறையப் பன்னிரண்டு வருஷ காலம் என் உள்ளத்தில் தாங்கிக் கொண்டிருந்தேன். சிவகாமியின் சபதத்தில் கடைசி வரியை எழுதி, முற்றும் என்று கொட்டை. எழுத்தில் போட்ட பிறகு தான் பன்னிரண்டு ஆண்டுகளாக நான் சுமந்து கொண்டிருந்த பாரம் என் அகத்திலிருந்து நீங்கியது. மகேந்திரரும் மாமல்லரும் ஆயனரும் சிவகாமியும் பரஞ்சோதியும் பார்த்திபனும் விக்கிரமனும் குந்தவியும். மற்றும் பல கதாபாத்திரங்களும் என் நெஞ்சிலிருந்து கீழ் இறங்கி, "போய் வருகிறோம்" என்று அருமையோடு சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்'[1] என்று எழுதுகிறார்.

இந்தச் சரித்திர நாவல்களையல்லாமல் மகுடபதி, சோலைமலை இளவரசி, அலையோசை முதலிய வேறு நாவல்களையும் 'கல்கி' எழுதியிருக்கிறார். எல்லாமே தொடர் கதைகளாக வெளிவந்தவை.

நாவலும் தொடர்கதையும்

பெர்ள் பக் என்னும் சிறந்த நாவலாசிரியை, 'தொடர் கதை எழுதும் உத்தி வேறு: நாவல் எழுதும் உத்தி வேறு' என்று சொல்கிறார். அதனால் தொடர்கதை எழுதுகிறவர்களெல்லாம், நாவலாசிரியர்கள் ஆவதில்லை; நாவலாசிர்யர்களுக்குத் தொடர்கதை எழுத. வருவதில்லை' என்று திட்டமாகச் சொல்கிறார். அவர் சொல்வதையே கேட்கலாம்:


  1. கல்கி: சிவகாமியின் சபதம், முகவுரை.