பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முதற்பதிப்பின் முன்னுரை

சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆதரவில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவுச் சொற்பொழிவு’ வரிசையில் 1963-64-ஆம் ஆண்டுக்குரிய சொற்பொழிவை நிகழ்த்தும்படி பல்கலைக் கழகத்தினர் என்னைப் பணித்தார்கள். வளர்ந்துவரும் புதிய இலக்கியப் படைப்புக்களைப் பற்றிய சொற்பொழிவாக இருக்கவேண்டும் என்பது இந்த அமைப்பின் நோக்கம். ஆகவே நான் ‘தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்பது பற்றிப் பேசுவதாக ஒப்புக்கொண்டேன். 1964-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13, 14, 15-ஆம் தேதிகளில் இந்தச் சொற்பொழிவுகள் நடைபெற்றன. மூன்று நாளும் பல்கலைக் கழகத்துத் தமிழ்த் துறைத் தலைவர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் தலைமை தாங்கினார். இறுதி நாளில் இந்தச் சொற்பொழிவுகளைப் பாராட்டிப் பேசினார். இந்தச் சொற்பொழிவுகளை ஆற்று வாய்ப்பு அளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். சொற்பொழிவுகளுக்குத் தலைமை தாங்கிப் பாராட்டிய டாக்டர் மு. வரதராசனார் அவர்களுக்கும் என் நன்றியறிவு உரியது.

இந்தச் சொற்பொழிவை நடத்துவதற்கு மூலதனம் வழங்கியவர்கள்: ‘கல்கி’ காரியாலயத்தார். கல்கியின் நினைவைப் பசுமையாக வைத்திருக்க இந்தச் சொற்பொழிவு வரிசை உதவும் என்று இதனை அமைத்த அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி பாராட்ட வேண்டும்.

வளர்ந்து வரும் தமிழ் இலக்கியத் துறைகளுக்கு வழி வகுத்த பல அறிஞர்களில் கல்கியின் பங்கு மிகப் பெரியது. ஆனந்த விகடனுக்கு ஆசிரியராக இருந்தபோதும். பிறகு தாமே தொடங்கிய கல்கிக்கு ஆசிரியராக இருந்தபோதும் அவர் தமிழுக்காக ஆற்றிய பணி வரலாற்றில் இடம் பெறற்