பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழ் நாவல்

பிரதாப முதலியார், அவர் தந்தையார், மாமனார் முதலிய எல்லோருக்கும் தண்டனை கிடைக்கிறது. இதனை உணர்ந்த பிரதாப முதலியாரின் அன்னை, வேறு பெண்களையும் அழைத்துக்கொண்டு சென்னை சென்று கவர்னரிடம் முறையிடுகிறாள். கவர்னர் வந்து விசாரித்து நியாயத்தை நிலைநிறுத்திக் கனகசபை தேவராஜ பிள்ளையின் மகன்தான் என்று தீர்ப்புக் கூறி எல்லோரையும் விடுதலை செய்கிறார்.

பிறகு கனகசபைக்குத் திருமணம் நிகழ்கிறது. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் அவ்வூரில் தங்க, மற்றவர்கள் தம் ஊர் செல்கிறார்கள். ஒருநாள் பிரதாப முதலியார் வேட்டை காணப்போய், யானையின்மேல் ஏறுகிறார். அந்த யானை மதம் பிடித்து. ஓடி ஒரு மலையை அணுக, அவர் மெல்லத் தப்பி மலைமேல் ஏறி விக்கிரமபுரி என்ற ஊரை அடைகிறார். அங்கே குடியரசின் பெயரால் அநீதி தாண்டவமாடுகிறது. சிலர் அவர்மேல் அநியாய வழக்குத் தொடுத்து அவரைச் சிறையில் அடைக்கிறார்கள். சிறையில் பொழுது விடியாமல் இருக்க வேண்டுமென்று ஒரு வெண்பாப் பாடுகிறார். மறுநாள் காலை முதலே சூரிய கிரகணம் என்பதை அறிந்து இப்படிச் செய்கிறார். பொழுது விடியாமல் இருக்கவே, எல்லோரும் ஓடிவந்து அவரை வணங்க, கிரகணம் விடும் நேரமென்பதை அறிந்து பொழுது விடியும்படி பாடி அவர்களின் மதிப்பைப் பெறுகிறார். அப்படிப் பாடுவதற்கு முன், உடனே அந்த நாட்டுக்கு ஓர் அரசனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதிக்கிறார். அதனால் அந்த ஊர்க்காரர்கள் யானையின் கையில் மாலையைக் கொடுத்து அனுப்புகிறார்கள்.

பிரதாப முதலியாரைக் காணாமல் வருந்திய ஞானாம்பாள் மதமடங்கிய யானை தனியே வருவதைக்