பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

53

கண்டு அதன்மேல் ஏறி முன்னே சொன்ன மலைக்கு வந்து, பிரதாப முதலியாருடைய முண்டாசு முதலியவை நழுவி விழுந்திருந்தமையால் அவற்றை எடுத்து, ஆண் வேடம் புனைந்து கொள்கிறாள். பிரதாப முதலியார் மரங்களில் தம் பெயரைச் செதுக்கிக் கொண்டே போயிருந்தமையால் அந்த அடையாளத்தைப் பார்த்துக்கொண்டு சென்று மலையினின்றும் இறங்கி, விக்கிரமபுரிக்குச் செல்லும் சாலையில் போகிறாள். யானை அவள் கழுத்தில் மாலையைப் போட்டுத் தலையிலே தூக்கிக்கொண்டு செல்கிறது. அவளுக்கு விக்கிரம பரிக்காரர்கள் முடி சூட்டுகின்றனர்.

ஆண் கோலத்தில் அரசாட்சி புரியப் புகுந்த ஞானாம்பாள் தன் கணவன் சிறைப்பட்டதை அறிந்து வழக்கை விசாரித்து அநியாய வழக்குக்காரர்களைக் கண்டிக்கிறாள். பிரதாப முதலியாரை உப ராஜாவாக்கி ஆண்டு வருகிறாள். பழைய அரசனின் பெண் புதிய அரசராகிய ஞானாம்பாளை மணக்க விரும்புகிறாள். ஊர்க்காரர்களும் வற்புறுத்துகிறார்கள். மறுத்தும் கேட்காமல், நாளும் குறிப்பிட்டு விடுகிறார்கள். ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் இரவோடு இரவாகப் புறப்பட்டுச் சென்று தேவராஜ பிள்ளையின் ஊராகிய ஆதியூரை அடைகிறார்கள். ஞானாம்பாள் தான் பெண் என்பதைத் தெரிவித்து, விக்கிரமபுரி இளவரசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில் அவளையே முடிசூட்டிக் கொள்ளும்படி அறிவுரை கூறுகிறாள். கடிதம் கண்டு ஆனந்தவல்லி என்னும் அந்த இளவரசியும் பிறரும் ஆதியூரை அடைய யாவரும் மீட்டும் விக்கிரமபுரிக்குச் சென்று அவளுக்கு முடிசூட்டித் திரும்புகிறார்கள்.

ஆதியூரிலிருந்து ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் தம் ஊராகிய சத்தியபுரிக்குப் புறப்படுகிறார்கள். இடையிலே ஓர் ஊரில் ஞானாம்பாளுக்கு அம்மைபூட்டி வைத்திய