பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

v

குரியது. தமிழில் எதனையும் தெளிவாகவும் சுவையாகவும் எழுதலாம் என்று காட்டினார் கல்கி. சிறு கதைகளையும், நகைச்சுவைச் சித்திரங்களையும், கலை விமரிசனங்களையும், அரசியல் கட்டுரைகளையும், வேறு பலவகைக் கட்டுரைகளையும், நாவல்களையும், எழுதி எழுதிக் குவித்தார் அவர். கல்கிப் பத்திரிகையின் ஆரம்ப காலங்களில் ஒவ்வோர் இதழிலும் பல வேறு தலைப்பில் பல வேறு கட்டுரைகளை எழுதி முக்கால் பத்திரிகையை நிரப்ப வேண்டிய அவசியம் அவருக்கு நேர்ந்தது. சிறிதும் சளைக்காமல் அதைச் செய்தார். எதை எழுதினாலும் பளிச்சென்று தெளிவாக விளங்கும் நடையில் எழுதினார்; ஆவலைத் தூண்டும் வகையில் எழுதினார்; சுவைத்துப் படிக்கும்படி எழுதினார். அந்தக் காலத்தில் தமிழ்ப் புத்தகங்களை ஆங்கிலம் அறிந்தவர்கள் படிப்பதில்லை, மற்றவர்களிலும் சிலரே படிப்பார்கள். கல்கி பேனாப்பிடித்து எழுதத் தொடங்கிய பிறகு அடுப்பங்கரை முதல் அலுவலகங்கள் வரையில் அவருடைய எழுத்துப் புகுந்தது. ஆங்கிலப் பட்டதாரிகளும் பெரிய வேலையில் இருந்த அதிகாரிகளுங்கூட அவர் எழுதியவற்றைப் படித்து அவற்றைப்பற்றி உரையாடத் தொடங்கினார்கள். அவருடைய தொடர் கதைகளைப் பற்றிய விமரிசனப் பேச்சுக்கள் வீடுதோறும் எழுந்தன.

இந்த அற்புதத்தைக் கல்கி செய்ததனால் தமிழ் நாட்டு மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் ஆர்வம் மிகுதியாயிற்று. இன்று பத்திரிகைகள் லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று தமிழ்நாட்டில் செலவாகின்றன என்றால் அதற்கு அடிக்கல் நாட்டியவர் கல்கி என்பதைச் சிறிதும் தடையின்றிச் சொல்லலாம்.

எதையும் தாம் நன்றாகப் புரிந்து கொண்டு, யாருக்குச் சொல்கிறோமோ அவர்கள் மன நிலையையும் புரிந்து கொண்டு, அவர்கள் உளங்கொள்ளும் வகையில் எழுதும் உத்தி கைவரப் பெற்றவர் கல்கி. சங்கீத விமரிசனத்தைத் தமிழில் அவர் தாம் தொடங்கி வைத்தார். ‘கர்நாடகம்’ என்ற