பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

63

அமைந்த நரம்புக் கட்டைத் திவவு என்று பழந்தமிழ் நூல்கள் சொல்லும். பிகு என்று இக்காலத்தில் குறிப்பதும் அதுதான். நாவல்களிலும் இப்படி ஒரு கட்டு அல்லது திவவு அல்லது பிகு வேண்டும். இடையிலே வேண்டாத சரக்கு ஏதேனும் புகுந்து விட்டால் அந்தத் திவவு தளர்ந்துவிடும். கதாபாத்திரங்களின் செய்கைகளும், பேச்சும், கதையினூடே வரும் நிகழ்ச்சிகளும் தளர்ச்சியின்றி, நாவலின் செறிவு அல்லது பிகுவுக்கும், ஒருமைப்பாட்டுக்கும், முழுமைக்கும் உதவுகின்றனவாக அமைய வேண்டும். இது மிகை என்று தோன்றும் வகையில் எது இருந்தாலும் அது இலக்கிய இன்பத்தைக் குறைத்துவிடும்.

பிரதாப முதலியார் சரித்திரத்தில் சோதிட சாஸ்திரியார் ஒருவரைக் கொண்டுவந்து விட்டு அவரை வேட்டை நாய் கடிக்கும்படி செய்வதும்,[1] உபாத்தியாயர் பிரதாப முதலியாரிடம் பேயுலாவுவதாகச் சொன்ன காட்டுக்குப் போய்ப் பேய் இல்லை என்பதை நிரூபிப்பதும்[2] மிகையான நிகழ்ச்சிகள். பிரதாப முதலியாருடைய தாயின் உபாத்தியாயராகிய கருணானந்தம் பிள்ளை இழந்த சொத்தைத் தந்திரத்தால் பெற்ற கதையும்,[3] தேவராஜ பிள்ளை நேரம் கழித்து வந்ததற்குக் காரணம் இன்னதென்று சொல்ல வைத்து நுழைத்த வைசிய சகோதரர்கள் இருவரில் ஒருவர் மற்றவரை ஏமாற்றிய கதையும்[4] அந்த வகையைச் சேர்ந்தனவே, எல்லோரும் தம்முடைய ஊருக்குத் திரும்பும்போது இடையில் ஞானாம்பாளுக்கு அம்மை பூட்டச் செய்து, அவள் இறந்து விட்டாளென்று துயரப்படுவதும், பின்பு மாண்டவள் மீண்ட அதிசயமும் ஆனந்தமும் உண்டாகும்படி செய்வதும்[5] கதையின் சுவைக்கு எந்த வகையிலும் துணை செய்யவில்லை.