பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தமிழ் நாவல்



மனித சமுதாயத்தில் பல வேறு தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் செய்யும் புரட்டுகளை வயிறு எரிந்து சொல்லியிருக்கிறார். அரசியல் இப்படி அமைய வேண்டும் என்று காட்டியிருக்கிறார். ஆங்கில மோகத்தால் தமிழை மறந்து நிற்கும் கனவான்களைப் பார்த்தவர் அவர். அவர்கள் நிலையைக் கண்டித்து எழுதியிருக்கிறார், தமிழில் உள்ள இலக்கியங்களை எல்லாரும் படித்துணர வேண்டுமென்றும், திருத்தமாகப் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், நீதி மன்றத்தில் தமிழே நடமாட வேண்டுமென்றும், வழக்காட வந்தவர்களிடம் கட்டணம் தண்டக் கூடாதென்றும் சொல்கிறார், இவ்வாறுள்ள தம் கருத்துக்கள் பலவற்றையும் தெள்ளத் தெளியச் சொல்லியிருக்கிறார்.


பெண்களின் உயர்வு


பெண்களின் உயர்வை நன்றாகக் காட்டியிருக்கிறார். சுந்தரத்தண்ணியும், ஞானம்பாளும் ஆடவர்களுக்கும் அறிவுரை கூறும் ஆற்றலுடையவர்களாக இருக்கிறார்கள், ஆபத்துக் காலங்களில் தம்மைக் காத்துக்கொள்ளும் ஆண்மை அவர்களிடம் இருக்கிறது. அழகும், அடக்கமும், கொடையும், பெருங்தன்மையும், இனிமையாகப் பேசும் இயல்பும், சொற்சாதுரியமும் உடையவளாக. ஞானம்பாளை உருவாக்கியிருக்கிறார், சுந்தரத்தண்ணியின் துணிவையும் வழக்காடும் திறத்தையும் சென்னைக் கவர்னரே மெச்சிப் பாராட்டுகிறார். ‘இப்படிப்பட்ட நியாயவாதிகள் உங்களுக்குக் கிடைத்தது உங்களுடைய அதிர்ஷ்ட விசேஷத்தான். ஐரோப்பாவிற்கூடச் சுந்தரத் தண்ணியைப்போல ஆயிரத்தில் ஒரு ஸ்திரீ அகப்படுவது அருமை’ என்று புகழ்கிறார். கதையின் இறுதியிலே அந்த இரண்டு பாத்திரங்களுக்கும் முடிசூட்டியதைப்