பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

தமிழ் நாவல்

பெரிய வீடு என்று பெயருள்ள ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் கூடத்திற்கு அடுத்த ஓர் அறையில் கீழே ஒரு கோரைப் பாய் விரித்து, அதன்மேல் திண்டு போட்டுச் சாய்ந்துகொண்டு, ஒருவர் படுத்திருந்தார். அவர் நித்திரை தெளிந்து எழுந்தவுடன் “ஆ சம்போ, சங்கரா!’ என்று இரண்டு தடவை உரக்கக் கொட்டாவி விட்டு விட்டு, காலைச் சொறிந்துகொண்டு, “அடியே, அடியே” என்று கூவினார். அப்பொழுது கூடத்தில் ரவிக்கை தைத்துக் கொண்டிருந்த அவருடைய மனைவி, இவர் குரல் காதில் கேட்டவுடன் இரண்டு முறை இருமிவிட்டு மெளனமாய் இருந்தாள். [1]

இப்படித் தொடங்குகிறது. பி. ஆர். ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம். எடுத்து எடுப்பிலே கிராமத்து வீட்டுச் சூழ்நிலையிலே வைத்துக் கதையின் முக்கிய பாத்திரமாகிய முத்துசாமி ஐயரை அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். இது பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கதை என்பது நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். அப்போது இருந்த நாட்டு நிலையையும் பழக்க வழக்கங்களையும் இந்த நாவலில் நாம் பார்க்கலாம். ரெயில் வண்டியும் தந்தியும் வந்துவிட்ட காலம். கதையிலும் அவை: வருகின்றன.

இந்த முதல் பாராவிலேயே முத்துசாமி ஐயருடைய செல்வநிலை தெரிகிறது. அவர் வீடு ‘பெரிய வீடு’ என்று பெயருள்ளது. அவர் பகலில் படுத்திருக்கும் கோரைப் பாயும் திணடுங்கூட இதை ஒருவாறு தெரிவிக்கிறது, ‘சம்போ சங்கரா’ என்று கொட்டாவி விடுவதில் அவருடைய பக்தி மணக்கிறது: ‘அடியே, அடியே’ என்று தம் மனைவியை அழைப்பதில் இல்வாழ்வின் நெருக்கம் புலனாகிறது.


  1. 1. கமலாம்பாள் சரித்திரம், ப. 9.