பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ் நாவல்

பேயாண்டித்தேவன் என்ற கொள்ளைக்காரனை விட்டு ஐயர் வீட்டில் திருடும்படி ஏற்பாடு செய்கிறார். திருட்டும் தீயும் சுப்பிரமணிய ஐயருக்கு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் உண்டாக்குகின்றன. போலிஸின் உதவியாலும் சொக்கன் என்பவனுடைய உளவாலும் பேயாண்டித் தேவனைப் பிடித்துச் சிறைப்படுத்துகின்றனர். முத்துசாமி ஐயர் தம் தம்பியின் சார்பில் வழக்குத் தொடுக்கிறார். பொன்னம்மாளின் தம்பி பிள்ளை வைத்தியநாதன் வருகிறான். முத்துசாமி ஐயரிடம் அலட்சியமாக நடக்கிறான். அவர் பெண்ணிடம் குறும்பு செய்கிறான். அவருடைய மாப்பிள்ளை ஸ்ரீவாசனோடு ஆற்று மணலில் பலீன் சடுகுடு விளையாடுவதாகச் சாக்கு வைத்து நையப் புடைத்து விடுகிறான். முத்துசாமி ஐயர் இதை விசாரிக்கப் புகும்போது வைத்தியநாதன் அவரை அவமதிக்கிறான்.

வழக்கு விசாரணைக்கு முதல் நாள் பேயாண்டித் தேவனைச் சேர்ந்த சுப்பாத்தேவன் சுப்பிரமணிய ஐயரை வந்து மிரட்டுகிறான். பேயாண்டிக்குப் பாதகமாகச் சாட்சி சொல்வதில்லை என்று அவர் உறுதிமொழி கூறிச் சாப்பாடு போட்டு அனுப்புகிறார். விசாரணையில் அவருடைய சாட்சி பலமற்றுப் போகவே, பேயாண்டிக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை மட்டும் தீர்ப்பாகிறது. தம்பி செய்த துரோகத்தால் முத்துசாமி ஐயர் வருந்துகிறார். பேயாண்டித் தேவன் அவரைக் கறுவுகிறான்.

ஒரு நாள் திடீரென்று முத்துசாமி ஐயருடைய குழந்தையாகிய நடராஜன் காணாமற் போகிறான். அவனை எங்கெங்கேயோ தேடிச் சென்று கடைசியில் ஒரு காளி கோயிலை அடைந்து அங்குள்ள தடையங்களால் குழந்தையை யாரோ காளிக்கு நரபலி கொடுத்து விட்டார்கள் என்று எண்ணி வருந்துகிறார்கள்.