பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. மூன்று நாவல்கள்

73


முத்துசாமி ஐயருடைய மாப்பிள்ளை சென்னை சென்று படிக்கிறான். அவனுடைய நண்பன் சுப்பராயனும் அவனுடன் இருக்கிறான். ஸ்ரீவாசன் சட்டப்படிப்புப் படிக்கும் போது அவனிடம் லக்ஷ்மியை அழைத்துக் கொண்டுவிட முத்துசாமி ஐயரும் கமலாம்பாளும் சென்று அங்கே தங்குகிறார்கள். ஒரு நாள் முத்துசாமி ஐயருக்கு அவர் தம்பி அபாய நிலையில் இருக்கிறாரென்று அவசரத் தந்தி வர, அவர் கமலாம்பாளுடன் ஊர் போகிறார். தம்பி தம் மனைவி வைத்த மருந்தினால் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார். பொன்னம்மாளுக்கு இயல்பான நிலை மாறிப் பைத்தியம் பிடிக்கிறது. அவளுடைய தாய் சங்கரி வந்து சேர்கிறாள். குடும்ப நிர்வாகம் அவள் கைக்கு மாறுகிறது.

பல வகையில் உலக வாழ்வில் சலிப்புத் தட்டிப்போன முத்துசாமி ஐயருக்குப் பொருள் கஷ்டமும் வந்து சேர்கிறது. பட்டணத்தில் இருந்தபோது பம்பாயில் அவர் கூட்டுச் சேர்ந்த வியாபாரம் படுத்து முறிந்து விட்ட தென்று கடிதம் வருகிறது. பம்பாய் சென்று ஒன்றும் பயணில்லையென்று அறிந்து சிதம்பரத்துக்கு வருகிறார், ஆருத்திரா தரிசனம் செய்துகொண்டு வருவதாக ஊருக்குக் கடிதம் எழுதுகிறார். சங்கரியும், சுப்புவும். ஈசுவர தீட்சி தரும் சேர்ந்து யோசனை செய்கிறார்கள், சுப்புவும் ஈசுவர தீட்சிதரும் சிதம்பரம் சென்று கமலாம்பாளுடைய ஒழுக்கத்தில் குறைவு ஏற்பட்டதாக முத்துசாமிஐயரிடம் சொல்லி, முன்பே விரக்தி மனநிலையையுடைய அவருக்குக் கோப தாபத்தை உண்டாக்குகிறார்கள். அவர் ஒரு பாழ் மண்டபம் சென்று தற்கொலை செய்துகொள்ள முயலும் போது, சச்சிதானந்த சுவாமிகள் காட்சியளித்துத் தடுத்துத் தேற்றி உபதேசம் செய்கிறார். அவரைத் தடவிக் கொடுத்து விசுவருப தரிசனம் காணச் செய்து மனத்தில் என்றும் அமைதியும் இன்பமும் உண்டாகும் நிலையை அருளுகிறார்.