பக்கம்:தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vii


'கல்கி'யோடு பழகிய நண்பர்களில் நானும் ஒருவன். அவர் ஆனந்த விகடனில் முறையாக ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய பழங்காலத் தொட்டே அவருடன் உறவாடும் பேறு எனக்குக் கிடைத்தது. என்னுடைய ஆசிரியப்பிரானாகிய டாக்டர் மகாமகோபாத்தியாய ஐயரவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்தும் நல்வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது, இப்போது அவருடைய நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் செவ்வி கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தச் சொற்பொழிவுகளில் முதல் நாள் பேச்சில் பொதுவாகத் தமிழ் நாவல்களின் தோற்றத்தையும் பிறகு அவை வளர்ந்து வந்த வகையையும் ஆராய்ந்திருக்கிறேன்.. இரண்டாம் நாள் பேச்சில் பழைய நாவல்கள் மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியைக் காணலாம். மூன்றாம் நாள் சொற்பொழிவில் கல்கியின் நாவல்களைப் பற்றிப் பேச வேண்டும் என்பது என் விருப்பம்; அவர் எழுதிய நாவல்கள் எல்லாவற்றையும் பற்றிச் சொற்பொழிவு ஆற்றுவதானால் அது மிகமிக விரிந்து செல்லும். ஆகவே சரித்திர நாவலுக்காகச் 'சிவகாமியின் சபத'த்தையும், சமூக நாவலுக்காக 'அலையோசை'யையும் ஆராய்ந்து என் கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன். 'சிவகாமியின் சபதம்' நாடக மேடை. ஏறிப் பெரும் புகழ் பெற்றதென்பதையும் 'அலையோசை' சாகித்திய அகாதமியாரின் ஐயாயிர ரூபாய்ப் பரிசு பெற்றதென்பதையும் தமிழ் மக்கள் அறிவார்கள். 'அலையோசை' தாம் எழுதிய நாவல்களில் நிலைத்து நிற்பதற்குரியது என்று அதன் ஆசிரியரே நம்பிக்கை பூண்டிருந்தார்; இதனை அவரே எழுதியிருக்கிறார்.

தமிழ் நாவல்களைப் பற்றிய ஆராய்ச்சியில் புகுந்தபோது . ஆங்கில நாவல்களின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் . பற்றிய செய்திகளை அறிய வேண்டும் என்று எண்ணிப் பல நூல்களைப் படித்தேன், அதனால் பெரிதும் பயன் பெற்றேன்'.. இந்தச் சொற்பொழிவுகளை ஆற்றும் வாய்ப்பு நேராமல் இருந்திருந்தால் அந்தப் பயன் எனக்குக் கிடைத்திராது.