பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பிரிவு-1 : நோக்கங்கள்

ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை பேசி வருவது தாய் மொழி. குழந்தையின் இயல்பான மொழியும் அதுவே யாகும். பொதுவாக நாம் நமது எண்ணங்களைப் பேச்சு மூல மாகவும் எழுத்து மூலமாகவும் வெளியிடுவதற்குத் தாய் மொழி சிறந்த கருவியாகப் பயன்படுகின்றது. அதுவும் விடுதலை பெற்ற நம் நாட்டில் இன்று தாய் மொழியின் தாண்டவத்தை எம்மருங்கும் காணலாம். உயர்ந்த மன வெழுச்சி களையும் கற்பனையாற்றலையும் கொண்ட தாய்மொழி இலக்கியங்களைச் சுவைப்பதுபோல் அயல் மொழி இலக்கியங் களைச் சுவைக்க முடியாது. தாய்மொழி எழிலுணர் திறனே யும் கற்பனையாற்றல்ையும் நன்முறையில் வளர்க்கின்றது; வழி வழியாக வரும் சமூக இயலையும் பண்பாட்டையும் அறியும் திறவுகோலாகவும் பயன்படுகின்றது; வாழ்க்கையை வளப் படுத்தி நீதியை இனிய முறையில் புகட்டுகின்றது. தாய் மொழி மூலம் கல்வி பெறுங்கால் காலச் செலவு, பணச் செலவு, முயற்சி ஆகியவை குறைகின்றன. தாய் மொழி பயில்வதால் மொழிப் பற்றும் நாட்டுப் பற்றுங்கூட நன் முறையில் அமைகின்றன. இத்தகைய நோக்கங்களே இந்த இயல் விரிவாக விளக்குகின்றது. இவற்றை நிறைவேற்ற வேண்டிய தாய்மொழியாசிரியர்களின் பொறுப்புக்களேயும் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய முறைகளையும் சுட்டிக் காட்டுவதுடன் தாய்மொழிக் கல்வியில் பிற பாட ஆசிரியர் களின் பங்கினேயும் நினைவூட்டுகின்றது இப் பிரிவு.