பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ்மொழியைப் பயிற்றும் நோக்கங்கள் 5

சிந்தனை, தெளிவான பேச்சு, தெளிவான எழுத்து ஆகிய திறன்கள் வேண்டப்படுபவை அல்லவா? வள்ளுவப் பெருந்தகையும்,

“ எண்பொருள ஆகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்பது அறிவு. ”

என்று கூறியிருப்பது ஈண்டு சிந்தித்துணரற்பாலது. தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர் இவ்வாற்றல்களை வளர்ப்பதில் தக்க கவனம் செலுத்தவேண்டும்.

தாய்மொழியில் நல்ல புலமை பெற்றால்தான் ஒருவர் தம் உணர்ச்சிகளையும், உயர் கருத்துக்களையும் தெளிவாக வெளியிட முடியும் ; அவருடைய படைப்பாற்றலிலும் ஒரு வளர்ச்சியைக் காண முடியும். மாணாக்கர்கள் முழு வளர்ச்சிக்கும் தாய்மொழிப் பயிற்சியே சிறந்ததோர் அடிப்படையாக அமைகின்றது என்று கூறலாம். தம் உணர்ச்சிகளை வெளியிடுவதில் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட மகிழ்ச்சி ஏற்படுவதுடன், அவர்களுடைய மனம், ஒழுக்கம், முதலியவை பண்பட்டு ஆளுமை (Personality) சிறக்கவும் இடமுண்டு. தாய்மொழியில் உள்ள சிறந்த செய்யுட்கள், காவியங்கள், வேறு பல இலக்கியங்கள் மனத்தை விரிவடையச் செய்து அவர்களுடைய தனிவீறு சிறக்கவும் வழிகோலும். இலக்கிய ஆசிரியர்கள் தம் காவிய உலகில் உலவச் செய்யும் காவியமாந்தர்களிடம் மாணாக்கர்கள் பழக வாய்ப்புக்கள் பெறும்பொழுது அம்மாந்தர்களின் இலட்சிய வாழ்க்கை அவர்கள் வாழ்வுக்கு வழிகாட்டியாக அமையும். இவ்வுலக வாழ்க்கையில் மக்கள் நாள் தோறும் காண நேரிடும் ஏமாற்றங்கள், ஏக்கங்கள் முதலிய வற்றையும், அவர்களிடம் அடிக்கடி எழும் இதயத்துடிப்புக்கள், இன்பக்கனவுகள் முதலியவற்றையும் இலக்கிய ஆசிரியர்கள் தாம் படைத்த மாந்தர்களிடம் நிறைவுசெய்து காட்டியுள்ளதைப் படிக்கும்பொழுது அவர்கள் உள்ளம்

  • குறள் , 424.