பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

உண்ணாது பட்டினி கிடந்தால் உயிர் உடலை விட்டு நீங்குமேயன்றி, ஆன்மாலயம் கிட்டாது. ஆகையால், உடம்பை ஒம்ப வேண்டும். எனினும், உடம்பை ஒம்புவதன் உத்தேசம் அதனுள் இலங்கும் உறு பொருளைக் காண்பதாகும். இந்தச் சிறந்த உண்மையை உலகியலே ஒட்டிச் செல்லுகையில் திருமூலர் உணர்த்துகிறார். -

உடல் சார்பான வாழ்க்கையிலிருந்து ஆன்மிக வாழ்க்கையின் உச்ச நிலைக்குச் செல்வதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகள் யாவை என்று வழிகாட்டிச் செல்கிரறார் திருமூலர். ஒழுக்கம் இல்லாமல் ஆன்மிக வாழ்க்கை அமைய முடியாது என்பது மஹான்கள் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கொள்கை. 'எவன் கெட்ட காரியங்களிலிருந்து விலக வில்லையோ, எவனுக்குச் சாந்தி ஏற்பட வில்லையோ, எவனுக்குச் சமாதி நிலைக்கவில்லையோ, எவனுடைய மனம் அமைதியைப் பெற வில்லையோ, அவனால் ஞானத்தினால் கூடப் பரமாத்மாவை அடைய முடியாது’ என்று உபநிஷதம் கூறுகிறது. திருமூலர் ஒழுக்கத்தை வற்புறுத்திச் செய்ய வேண்டுவன எவை, தவிர்க்க வேண்டியவை எவை என்றெல்லாம் விளக்கிச் சொல்கிறார். -

அறிவார் அமரர் தலைவனை நாடிச் செறிவார் பெறுவர் சிலர்தத் துவத்தை நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும் பெரியா ருடன்கூடல் பேரின்ப மாமே.

என்று பெரியாருடன் கூடுவதால் பெறக்கூடிய பேரின்பத்தை எடுத்துக் காட்டுகிறார், ஆன்மிக வாழ்க்கைக்குப் பெரியோர்களின் துணை இன்றியமையாதது என்பது மஹான்கள் அனைவர்க்கும் உடன்பாடு.

இனி யோகப் பயிற்சியின் நெறிமுறைகளை விளக்கிச் சொல்வதுடன் அமையாது, அதன் முடிந்த நோக்கம் யாதாயிருக்க வேண்டும், பயிற்சியின் இடையிலே ஏற்படும் சிறு விளைவுகளை ஏன் கைவிட வேண்டும் என்பவற்றையும், திருமூலர் சுருக்கமாகக் கூறுகிறார்,