பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

வயிற்று உப்புசத்திற்கு

பெரிய மஞ்சட் கிழங்கை அடுப்பிற் போட்டுச் சுட்டுக் கரியாக்கி நன்றாகப் பொடி செய்து, இரண்டு விரல்களால் எடுக்கும் தூளை பாலிற் கலந்து குடிக்க, வயிற்று உப்புசம், மூச்சுத் திணறல் முதலியன நீங்கும்.

வயிற்று வலிக்கு

சுக்கு, மிளகு, அரிசித் திப்பிலி மூன்றையும் சமமாக எடுத்துத் தனித்தனியாகச் சட்டியில ஏற்றி வறுத்து, பொடி செய்து, துணியில் வடிகட்டி, சுண்டைக்காயளவு எடுத்து பசு நெய்யிற் கலந்து சாப்பிடவும். பத்தியம் புளி, மிளகாய் கூடாது.

சீதபேதிக்கு

சீதக்கடுப்பு நோயால் இனி துன்பமடைய வேண்டியதில்லை. அது வியக்கத்தகுந்த விதமாக நீங்குவதற்குரிய மருந்து இது.

1. அரைக்காற்படி அளவு நெற்பொரியை மென்று தின்று தண்ணீர் குடிக்கவும். குழந்தைகளானால் தின்னும் அளவுக்குக் கொடுக்கவும். இரண்டே வேளை போதுமானது.

2. கால் வீசம்படி வெந்தய்த்தை ஒரு வீசம்படி தண்ணிரில் இரவில் ஊறவைத்து, மறுநாட் காலையில் வெந்தயத்தையும், அதன் சாற்றையும் அருந்தினால், வயிற்று உழைவு, சீதக்கட்டு, சீதக்கடுப்பு முதலிய நோய்கள் இரண்டே வேளையில் தீரும்.

பத்தியம்: காரம் கண்டிப்பாய்க் கூடாது.

மூன்று வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த இரண்டாவது மருந்து உதவும்.