பக்கம்:தமிழ் மருந்துகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை

நம் நாட்டு வைத்தியம் என்று பொதுவாகக் கூறப்படுவது மூன்று. அவை சித்தமருத்துவம் யூனானி, ஆயுர்வேதம் எனப் பெயர் பெறும் யூனானி உருதுமொழிக்கும், ஆயுர்வேதம் வடமொழிக்கும் சித்த மருத்துவம் தமிழ் மொழிக்கும் உரியவை. ஆயுர்வேத மருந்துகள் பெரும்பாலும் பஸ்பமும் திராவகமுமாகவும், யூனாணி மருந்துகள் பெரும்பாலும் அல்வாவும் இலேகியமுமாகவும், சித்த மருத்துவ மருந்துகள். பெரும்பாலும் எண்ணெயும் கியாழமுமாகவும் இருக்கும்.

சித்தர்கள் நம் நாட்டுப் பேரறிஞர்கள்; நமது முன்னோர்கள். அவர்கள் துருவி ஆராய்ந்து, கண்டுபிடித்துக் கையாண்டு கொடுத்துப்போன செல்வமே சித்த மருத்துவமாகும். இவ்வைத்தியம் தோன்றிய காலத்தை எவராலும் குறிப்பிட்டுக் கூற இயலாது. கூறவேண்டுமானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலம் என்றே கூறவேண்டும்.

தமிழ் மருத்துவம், தமிழ் நாட்டில், தமிழ் அறிஞர்களால், தமிழ் மொழியில் கூறப்பெற்றவை என்ற சிறப்பை மட்டும் பெறவில்லை. அது தமிழகத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்பத் தமிழகத்தில் வாழும் மக்களுக்கு வருகின்ற நோய்களைப்போக்க, தமிழகத்தில் முளைக்கும் செடி கொடிகளையே மூலிகைகளாகக் கொண்டிருக்கிறது என்ற பெருஞ் சிறப்பையும் பெற்றிருக்கிறது.