தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
97
தொடர்பு கொண்டிருந்தவர்கள். பல காலங்கடந்த பின்னராவது தம் கருத்தினை அடிகளார் மாற்றிக் கொள்ளக் கூடுமென அவர் கருதியுமிருக்கலாம். சுவாமிகளின் உறுதி சிறிதும் தளரவில்லை யென்பதை அவர்களது இறுதிக்கால நிகழ்ச்சியான பின்னி கழச்சியால் அறியலாம்.
வடாற்காடு மாவட்ட ஆரணியிற் பிறந்து, சென்னையில் வாழ்ந்து வந்தவர்கள், கிருஷ்ணசாமி முதலியாரின் உடன்றோன்றல் மனைவியார் பாச்சியம்மையார் என்பவர். சுவாமிகள் 1934லும் அதற்குப் பின்னரும் சென்னை எழுந்தருளியிருந்த காலங்களில் அவ்வம்மையார் தன் மக்கள் மருகியரோடு சுவாமிகளைத் தரிசித்து, அவர்களது சொல்லமுதங்களை மாந்தியவர்களு மாவார்கள். சில ஆண்டுகள் கந்தர் சஷ்டி விழாக் காலங்களில் திருப்பாதிரிப்புலியூர் வந்து விரதமிருந்தும், சொற்பொழிவுகளைக் கேட்டும் முருகன் எழுந்தருளள் முதலியவற்றைத் தரிசித்தும் கந்த சஷ்டி மஹாபிஷேக முதலியவற்றைக் கண்டபின், தன் பொருட் செலவில் ஓராண்டு முருகக் கடவுளுக்குத் திருமண விழாவினை நிறைவேற்றி வைத்தும் பொருள் பெற்ற பயனை யடைந்தவர்களாய்ச் சுவாமிகளிடம் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார்கள். அந்த அம்மையார், சுவாமிகளைக் காசி யாத்திரை எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிவிகை யூர்ந்து செல்லல் பெருந் துன்பந்தருவதோடு, காலக் கடப்பும் விளையுமென அறிவித்து, மோட்டார், லாரியில் ஏற்பாடு செய்து விடுவோம்; காரில் பயணத்தை மேற்கொள்ளத் திருவுளம் பற்ற வேண்டுமென அவர்கள் விண்ணப்பித்துக் கொண்டனர். அதனையும் நகை முகத்தோடு சுவாமிகள் ஏற்றுக் கொள்ளாமல் மறுத்தனர்.
இதுவரை குறிப்பிட்ட வற்றால் சுவாமிகள் 1889-ல் ஏற்றுக் கொண்ட சந்நியாச முறைக்குரிய உறுதி மொழிகளிலிருந்து ஒருக்காலும் வழுவினாரல்லர் என்பது விளங்கும்.
இங்ஙனம் உறுதிமொழி யருளிச் சந்நியாச நிலையையும், அறப் பள்ளித் தலைமையையும் ஏற்றருளிய காலத்தில் அவர்களுக்குப் பதினாறாண்டுகளே நிறைவெய்தியிருந்தன என்பதை நாம் நினைவிற் கொள்ளல் வேண்டும்.
சுவாமிகள் தலைமைப் பொறுப்பை யேற்றுக் கொண்டருளிய காலத்திலே, மடாலயப் பொருள் நிலைமை பெரிதும் வருந்தத் தக்கதாயிருந்தது.