பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

வல்லிக்கண்ணன்

அவற்றின் கட்டிட நிலை - நில வருவாய் நிலையும் மோசமடைந் திருந்தன. அவைகளை நேரிற் சென்று கவனித்துச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதனால் சுவாமிகள் திருக் கோவலூருக்கும் ஆரணிக்கும் சென்று மீள்வார்கள். அங் கெழுந்தருளி யிருக்குங்கால் தமிழும் சைவமும் பரப்புவான் வேண்டிப் பல சொற்பொழிவுகளையும், விரும்பி வந்தோர்க்குத் தமிழ் போதித்தலையும் மேற் கொள்வார்கள் அங்ஙனமே, திருப்பாதிரிப்புலியூரிலும் தங்கியிருக்கும் காலங்களி லெல்லாம் நடைபெறும். அதற்கென ஓர் சங்கம் நிறுவ வேண்டு மென்பது சுவாமிகளின் உள்ளக் கிடக்கையாக இருந்தது.

(1903) சோபகிருது ஆண்டில், பாண்டித் துரைத்தேவரவர்கள் புலிசை மடாலயம் போந்தனர். அவர்களை வரவேற்றுப் பாராட்டிய தோடு, அவர்களைத் தலைமையேற்கச் செய்து ‘வாணிவிலாச சபை’ என்ற ஓர் சபையைத் தமது மடாலயத்தில் தொடங்கினார்கள். அதன் அங்கமாக வாரந்தோறும் சொற்பொழிவுகள் நடைபெறும். கார்த்திகை முதலான சிறப்பு நாட்களிலும் சொற்பொழிவு நடைபெறும். அந்தச் சபைக்கு அடிகளாரே தலைவர்கள். குப்புசாமி செட்டியார் என்ற ஓர் வழக்கறிஞர் செயலர். அங்கத்தினர் பலர் உண்டு. சுவாமிகள், தாமே சொற்பொழிவுகளை நிகழ்த்துவதோடல் லாமல், தம்மிடம் பயில்வோரையும் சொற்பொழி வாற்றச் செய்து, முன்னுரை முடிவுரைகளால் சிறப்பித் தருள்வார்கள்.

அடிகளாரிடம் பயின்றோர், பல திறத்தினர், செல்வர், வறியர், சிறியர், பெரியர், இல்லறத்தினர், துறவறத்தினர் சிறிது கற்றோர், கல்வியறிவற்றோர், தொழில் புரிவோர், அரசாங்க உத்தியோகம் புரிவோர், உழுதுண்போர், உழுவித் துண்போர் யாவருக்குமே மடாலயத்திற் பாடம்போதிக்கப்பெறும். பற்பலர் தமக்கு உண்டி உறையுள் பெற்றுத் தங்கியும் பயில்வதுண்டு. துறவற நெறி நின்றோரும், நிற்கச்சாதனை புரிவோருங்கூட அடிகளாரையடுத்துக் கல்வியும், உண்டி உறையுள் முதலிய பெற்றுக் கல்வியும் ஒழுக்கமும் நிரம்பப் பெற்றவராய்ப் பற்பல இடங்களுக்குஞ் சென்று தமிழ்ப் பணி, தெய்வப் பணிகளில்ஈடுபட்டவரும் உண்டு. அவருள் அறிந்தார் சிலரைப் பற்றிப் பின் காணலாம்.

ஞானியார் மாணவர் கழகம் : சுவாமிகள் திருக்கோவலூரில் தங்கியிருந்த காலங்களில் அங்கு அவர்களையடுத்துப் பயன் பெற்றோர் பலர். அவர்களுட் குறிப்பிடத்-