உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

113

தூண்டுகோல் பெரிதும் காரணமாயிற்று. அக் கழகத்தின் சார்பில், 1913ல் கலைமகள் என்ற மாத இதழ் தொடங்கினர். அதன் முகல் இதழுக்குச் சுவாமிகள் ஆசியருளி எழுதியிருந்த திருமுகம் மிக்க சிறப்புப் பொந்திய தொன்றதாகும். அந்தக் கலைமகள் இதழே இன்றும் சென்னை யிலிருந்து வெளிவருவது.

தமிழ் மொழிப் பற்றும், சமயப் பற்றும் கொண்டு ஒழுகும் அன்பர் யாவரேயாயினும், அவர் பால் சுவாமிகள் காட்டும் பரிவு தனிச் சிறப்புடையதேயாகும். புதுவை நிகழ்ச்சி மட்டுமே இங்குக் குறிப்பிடப் பெறுகிறது.

புதுவையில், ரோமன் கத்தோலிக்க - கிருஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், சின்னையா - ஞானப்பிரகாச முதலியார். அவர் மத வேறுபாடற்றவர். பிற மதங்களை வெறுக்காதவர். வடலூர் இராமலிங்கர் அருட் பாக்களில் ஈடுபாடும் கொண்டவர். சைவ சமயத்திலேயுள்ள கொள்கைகள் பலவற்றை ஆதரிப்பவர். அவர் இத்தகையாரென்பதை அறிந்த நம் சுவாமிகள், கலைமகள் கழகத்திற்குச் சென்றிருந்த காலையிலும், அவர், விரும்பியழைத்த தன்பேரில் ‘மங்களவாசம்' என்னும் அவர் மாளிகைக்கு எழுந்தருளினார்கள். அங்கு முதலியார் மிகவும் விரும்பியதால், சீதா கல்யாணம் என்ற தலைப்பில் அரியதோர் சொற்பொழிவாற்றினார்.

அந்நாளில், சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் தலைவராக அஷ்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் இருந்தார். அவர், சுவாமிகள் கிருஸ்தவர் இருப்பிடம் சென்ற நிகழ்ச்சியைக் கண்டித்துச் சமாஜத் தலைவராய பதவி வேண்டாமென எழுதிக் கொடுத்து விட்டார்.

மாணவர்கள், இச்செய்தியை அடிகளார்க்கு அறிவித்தனர். அவர்களோ, "என்னே அறியாமை பிற மதத்தை இகழாமலும், தம்மதத்தில் திண்மையான பற்றுங்கொண்டிருப்பதன்றோ ஒவ்வொருவர் கடமையுமாகும்." என்று குறிப்பிட்டருளினார்கள். அதற்கு ஆதாரமாகச் சாக்கிய நாயனார் புராணத்தில்

          ‘எந்நிலையில் நின்றாலும் எவ்வேடங் கொண்டாலும்
          மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருளன்றே"
          என்னும் பகுதியை எடுத்துக் காட்டினார்கள்.
          அதன் பின்னரே நல்லசாமிப் பிள்ளை தலைவராயினார்.