உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

119

திருப்பணிகளைச் செய்து மீண்டார்கள். பின் செஞ்சி எழுந்தருளிய காலத்தும் அங்கு எழுந்தருளித் தம் முதற் குருநாதர் பூசித்த திருவுருவங்களைப் பூசித்து மீண்டார்கள்.

1937 ஆம் ஆண்டில் திருக் கோவலூரில் தங்கி, ஸ்ரீமஹா குருமூர்த்திகள் ஆலயத்திற் சில திருப்பணி செய்தும், முதல் குருமூர்த்திகள் ஆலயத்தைக் கட்டி முடித்துப் பூசனை மேற்கொண் டொழுகியருந்த ஸ்ரீ அருணாசல சுவாமிகள் சமாதிகோயிலிலும், வீரட்டநாதர் ஸ்ரீ மஹா குருமூர்த்திகளுக்கு ‘திட்டானுபூதி' நூலைத்தந்து, ஒரு மொழி மகாவாக்கியம் அருளிய ஆவணிமூல நாளிலும் ஆண்டு தோறும் எழுந்தருளி விழாக் கொள்ளற் கிடமான ஆவணி மூல மண்டபத்தினைப் பழைய செங்கல் கட்டித்தை இடித்துப் புதுவதாகக் கருங்கல்லால் அமைத்துக் கட்டியும், அறையணி நல்லூரிலுள்ள மடாலயத்திற்குச்சொந்தமான பல கட்டிடங்களைச் செப்பனிட்டும் மடாலயத் திருப்பணிகளை மேற்கொண்டதும் உண்டு. அக்காலங்களில், வந்து கேட்போர் இருந்தால் பாடம் நடைபெறும். எந்த நேரம் எந்த நூலில், எவர் ஐயம் என வந்தாலும், அப்போது சுவாமிகள் எந்த வேலையிலும் ஈடுபட்டிருந்தாலும், புத்தகம் முதலியவற்றைப் பாராமலே அவ்வையங்களை யகற்றியருள்தல் அடிகளாரிடம் மட்டுமே காணப்பெற்றஒரு தனிச் சிறப்பாகும். அங்ஙனம் நிகழ்வது, திருக்கோவலூரில் மட்டுமன்றி எங்கெங்குச் சென்றாலும் நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

திருப்பாதிரிப்புலியூரில், இரண்டாங் குருமூர்த்திகள் முதலாகப் பரிபூரணமடைந்த குருமூர்த்திகளின் ஆலயம் உண்டு. அதனைத் திருப்பணி செய்ய வேண்டிய நிலை வந்தது பல திருப்பணி வேலைகளையும் செய்து தூபி, கோபுரங்களைப் புதுக்குவித்து 1937ல் (தாது௵ தை௴ 19௳) குடமுழுக்கு நிறைவேற்றி யருளினார்கள். அக்காலை ஞானதேசிக மாலை என்ற தோத்திரப் பாமாலை யொன்றினை இயற்றி அச்சிடுவித்து அனைவர்க்கும் வழங்கச் செய்தார்கள். (அந்நூல் பிற் சேர்க்கையாக இணைக்கப் பெற்றுள்ளது.)

தம் மடாலயத்திற்குரிய நிலங்களிலிருந்து ஒப்பந்தப் படியும், பாக்கியில்லாமலும் உணவுப் பொருள் முதலியவை தடையின்றி வருதற்காம் வகை செய்தருளினார்கள்.

இனி அவர்கள் சைவமுந் தமிழும் தழைப்பிப்பான் மேற்கொண்ட பணிகளைக் காண்போம்.