பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

121

மென வற்புறுத்திக் கூறினார்கள். அவர், சென்று அன்பர் பலரிடம் கூறி, அவர்களுடைய ஆதரவையும் பெற்றார். (7-7-1905) விசுவாவசு ஆண்டு ஆனித்திங்களில், சென்னை அன்பர்களும் பிற வெளியூர் உள்ளுர் அன்பர்களும் கூடியிருந்த அவையில் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் ‘சைவ சித்தாந்த மகாசமாசம்’ என்ற பெயருடன் நிகழ்ச்சிகளுக்குத் தாமே தலைவராக இருந்து தொடங்கி வைத்தார்கள். அதற்குச் சிதம்பரம் நாவலர் பாடசாலை - சதாசிவம் பிள்ளையவர்கள் தலைவராகவும், பண்டிதர் நாகை வேதாசலம் பிள்ளை (மறைமலையடிகள்) செயலாளராகவும் அமர்த்தப் பெற்றனர். சுவாமிகள், முருகப்பெருமான் திருவருளும் மடாலய முதற் குருநாதரவர்களின் அருளும் சமாச வளர்ச்சிக்குத் துணைபுரிக’ என வாழ்த்தி மகிழ்ந்தார்கள். .

சமாசம் ஆற்றவேண்டிய பணிகள், அதில் ஈடுபட்டோருடைய உழைப்பு முதலாயவற்றை அடிகளார் விரிவாக எடுத்துக்கூறிக் கூடியிருந்தோர் யாவருக்கும் சமாசத்தினிடத்தில் பற்றும், தொண்டு உள்ளமும் எழுமாறு முடிவுரை கூறியருளினார்கள். பின்னர், சென்னையில் சில கூட்டங்களைச் சமாசம் நிகழ்த்தியது. அவை சிறப்புடன் நிகழ்ந்தமை கேட்டும், கடித முதலியவற்றின் வாயிலாக அறிந்தும், இதில் ஈடுபட்டோர் யாவரையும் வாழ்த்திக் கடிதம் எழுதி ஊக்கி வந்தார்கள்.

சமாச மாநாடுகள் :

சுவாமிகளின் ஊக்கத்தாலும் ஆசிகளாலும் சென்னையில் பற்பல இடங்களில் சைவ சித்தாந்த மகா சமாசக் கூட்டங்கள் நடைபெற்றன. மாநாடுகளுக்கென்று தனியே அஞ்சலகம் முதலியனவும் அமைக்கப்பெற்றதும் உண்டு. சார்பாளர்கள் பலர் வெளியிடங்களிலிருந்தும் வருவர். பார்வையாளர்களும் அங்ஙனம் வருவதுண்டு. சார்பாளர், பார்வையாளர், மங்கையர்களுக்குத் தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பெறும். இவையனைத்தையும் தம் திருமடத்திருந்து கேட்டறிந்த சுவாமிகள், இவ்வழியே சமய வளர்ச்சி சிறந்தோங்கும் என்று மகிழ்ந்திருநதாாகள்.

சுவாமிகளின் ஆற்றலும், செயல் திறமை, ஊக்கம் முதலியனவும் நந்தமிழ்நாட்டெல்லை மட்டுமின்றி, மாநாட்டுக்கு வந்து மீண்ட தமிழர் வாழும் இலங்கை முதலாம் கடல் கடந்த நாடுகளிலும் நன்கு பரவின.