பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிவத்திரு ஞானியார் அடிகள்
வல்லிக்கண்ணன்

தமிழ் நாட்டில் சைவமும் தமிழும் தழைத்து ஓங்குவதற்கு சைவ சமய ஆதீனங்களும் மடாலயங்களும் அரும்பணிகள் புரிந்துள்ளன. ஆதீனங்கள் மற்றும் மடாலயங்களின் தலைமைக் குருமூர்த்திகளாக அருளாட்சி நடத்துகிறவர்கள், யாவர்க்கும் இறை உணர்வு ஊட்டுவதோடு, சமயச் சார்பான சங்கங்கள் அமைப்பதிலும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பலவகைகளிலும் தொண்டாற்றுவதிலும் ஆர்வம் உடையவர்களாக விளங்குகிறார்கள்.

அவர்கள் பலருள்ளும் தனிச்சிறப்பும் உயர்மதிப்பும் பெற்றவர் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் ஆவர்.

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது குருமூர்த்திகளாகப் பொறுப்பேற்று அருள் ஆட்சி புரிந்தவர் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள். அவர்கள் சிவத்திரு ஞானியாரடிகள் என்ற சிறப்புப் பெயரும் பெற்றிருந்தார்கள். அவர்களது வாழ்வு தமிழின் வாழ்வு, அவர்களது வளம் சைவத்தின் வளம் எனத் திகழும் தன்மையில், ஐம்பத்து மூன்று ஆண்டுகள் செங்கோலோச்சியவர்கள் ஞானியாரடிகள்.

மக்கள் வாழ்வை செம்மைப்படுத்தவும், அவர்கள் நல் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து நல்வாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டவும் குருமார்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் மடாலயங்களில் அமர்ந்து, தாம் நல் ஒழுக்க முறைகளைக் கையாண்டு, பிறரையும் அந்நெறிகளைப் பின்பற்றச் செய்து, யாவராலும் போற்றப்படுகிறார்கள். சீலம் கைக்கொள்ளும் தூயநெறிகளில் வீரசைவநெறி மிகச் சிறப்பானது ஆகும்.

வீரசைவர் அறுபத்துநான்கு சீலங்களைக் கடைபிடிக்க வேண்டும். தக்க கட்டுப்பாடுகளைக் கைக்கொண்டு வாழ வேண்டும். குருவின் திருவடி தியானித்து, குருமொழி கடவாமல் செயலாற்ற வேண்டும். பலபல ஒழுக்கக் கட்டுப்பாடுகளுடன் சீலநெறியில் வாழ்ந்த வீரசைவர் தங்கள் பெயருக்குப் பின் அய்யர் என்று அடைமொழி இணைத்துக் கொள்வது வழக்கம். வீரசைவர், பல பெரிய சிவ ஆலயங்களில் பூசைகள் புரிந்திருக்கிறார்கள். மிகச் சில கோயில்களில் இன்றும் வீரசைவர் பூசை நடைபெறுகிறது.