பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

127

நல்லூர்ச் சிவாலயமாம் திருவருட்டுறையில் நடைபெற்றது. நம் சுவாமிகளே தலைவர்களாக இருந்து மூன்று நாள் விழாவினைச் சிறப்பாக நடத்தினார்கள். ஆங்கு, சமாச விழா நடை பெறுவதையறிந்த திருவாடுதுறை ஆதீனத் தலைவர்கள் தம் பிரதிநிதியை யனுப்பியதோடன்றித் தலைவர்களுக்குச் சில மரியாதைகளையும் அனுப்பி வைத்தார்கள். அச் சமாக விழாவின் பொறுப்புகளை யேற்றவர், திருவெண்ணெய் நல்லூர்ச் சின்னசாமி ரெட்டியாரவர்கள். அஃது, சமாச இருபத்து நான்காம் ஆண்டுவிழா வாகும்.

திருப்பாதிரிப் புலியூரில் 'சைவப் பெரியார் மாநாடு' நடந்து முடிந்தபின், சுவாமிகளுக்குப் புற முதுகில் பிளவை அரும்பிச் சில மாதம் படுத்த படுக்கையிலிருந்து, இருமுறை அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின் ஒருவாறு நலம் பெற்றனர். அங்ஙனம் நலமுற்ற சில நாட்களுக்குள்ளேயே தம் தொண்டுகளில் முனையத் தொடங்கி விட்டார்கள். ஆம்பூர், வாழைப் பந்தல் ஆம் வடாற்காடு மாவட்டத்தில் சில நாள் அன்பர்களுக்குச் சொல்லமுதம் வழங்கி மகிழ்வித்தார்கள். ஆம்பூரில் இருபத்திரண்டு நாட்கள் எழுந்தருளி யிருந்தார்கள். அதன் பின், திருவெண்ணெய் நல்லூர்ச் சமாச விழாத் தலைமை யேற்றருளினார்கள். சைவ அன்பர் பலர் அப்போது சுவாமிகளின் உடல் நலமுங் கருதாத தொண்டினைப் போற்றினார்கள்.

பிறவிடங்களில் சமாசம் :

1934 ஆம் ஆண்டில், சமாசத்தின் இருபத்தொன்பதாம் ஆண்டு நிறைவு விழா மூன்று நாள் திருவதிகையில் நடைபெற்றது. அப்பேரவையின் சிறப்புச் சொற்பொழிவினை மட்டுமே சுவாமிகள் ஏற்றுக் கொண்டார்கள் தலைவர் திரு.வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள்.

தாமே தலைவராக இருக்க வேண்டுமென்ற கொள்கை கொள்ளாமல், பிறருக்கும், அவ்வாய்ப்பினை யுண்டாக்கித் தருவதோடு, தாமும் விழா முழுதுக்கும் அங்கெழுந்தருளிச் சிறப்பித்தும், ஆசி வழங்கியருள்வதும் யாவருமே எளிதில் மேற்கொள்ளாத சிறப்பியல்புகளாம் என்பதை ஈண்டுக் குறிப்பிட வேண்டியுள்ளது.

1934 ஆகஸ்டு மாதத்தில் மயிலாப்பூர் சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் விசேட மாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு அடிகளாரே தலைமை தாங்கியருளினார்கள்.