பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

131

தமிழைக் கற்றால் பயன் ஒன்றும் கிடையாதாதலால், எப்பாடு பட்டேனும் அயலார் கல்வி படிப்பதற்கே தம் பிள்ளைகளை யனுப்பினர் பெற்றோர். அப்பள்ளியிலோ பொருட் செலவு மிகுதியும் உண்டு. திண்ணைப் பள்ளிகள் சில ஒருவாறு கல்வியளித்தன எனினும் அவை போற்றுவாரின்மையாலும் போதனை முறை பயின்று போதிப்பவர் ஆங்கில்லையாதலால் அரசினர் ஆதரவு பொறாமையாலும் அருகிவிட்டன. இந்த நிலைதான் இந்த நூற்றாண்டின் தொடக்க நிலை. அந்தோ தமிழின் நிலை இதுவா? எத்தனை அருமையான நூல்கள் உள்ளன. அவையன்றோ உள்ளத்தை வளர்ப்பன அவற்றைக் கற்றவரல்லரோ, தமக்கென வாழாப் பிறர்க்கென முயலுநர் என்றெல்லாம் சுவாமிகள் உளமுருக எண்ணுவார்கள். தம் அரிய சொற் பெருக்குகளில் சொல்லவும் சொல்வார்கள். சொல்லுங்கால், கேட்போர் தமிழினிடம் பற்றற்றவராய் இருப்பாரே யெனினும் அவர்க்கும் சிறிதளவும் மனதில் தாக்கா வண்ணம் கூறுவார்கள். அவர்களது உள்ளமே தமிழ் மூச்சே தமிழ் தண்ணளியே தமிழ் ஆம்! பிறமொழிகள் சிலவற்றைச் சுவைத்தறிந்த பின் கொண்ட திடமான உள்ளத்தில் ஊறிய தமிழ்! 'இருந்தமிழே உன்னால் இருந்தேன்’ என்ற ஆன்றோர் வாக்கு அவர்களுக்கே பொருந்துவதாகும்.

அப்போதெல்லாம், தமிழ்க் கல்லூரி கிடையாது. திருவையாற்றிலே வடமொழிக் கல்லூரி இருந்தது. பல்கலைக் கழகத்தாரின் கீழ்க்கலைப் பட்டத் தேர்வுக்கு வடமொழி பயில்வோர் அங்குப் பயிற்றப் பெற்றனர். சுவாமிகள் தென்னாட்டுத் தல யாத்திரை செய்தபோது அவர்களது வட மொழியாற்றல் குறித்து வியந்து மகிழ்ந்த அக் கல்லூரித் தலைவரும், ஆசிரியர்களும் சுவாமிகளுக்கு வடமொழியிலேயே ஓர் பாராட்டிதழ் கொடுத்துச் சிறப்புறச் செய்தது முண்டு.

வடமொழிக் கல்லூரி தமிழுக்கும் ஆயிற்று :

தமிழ் நாட்டு மன்னவன் செய்த அறக்கட்டளை தமிழுக்கென அமைக்கப் பெற்றிருக்கக் கூடாதோ? ஆம், அதனை ஆராய வேண்டுமென்ற கருத்து அவர்கள் உள்ளத்தில் முகிழ்ந்தது. யாத்திரையின் போது, சுவாமிகளுக்கு அன்பராயினர் பலர். அவ்வவரும் சுவாமிகளின் நாவன்மை, தவத்திருக் கோலம், வசீகரிக்கும் திறன் முதலிய வற்றில் மனத்தைப் பறிக்-