பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

133

விழாக்களுக்குச் சுவாமிகளே தலைமை தாங்கியுள்ளார்கள். அவ் விழா சித்தார்த்தி ஆண்டு வைகாசித் திங்கள் 11௳ நடைபெற்றது. அத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் கல்லூரி ஒன்றினையும் தொடங்க வேண்டுமென நம் சுவாமிகள் அவர்களை ஊக்கினார்கள். அங்ஙனமே அச்சங்கத்தின் ஆதரவில், அச்சங்கம் வெள்ளிவிழாக் கொண்டாடிய 1938, ஏப்ரலில் புலவர் கல்லூரி ஒன்று அடிகளாரின் திருக் கரங்களாலேயே தொடங்கி வைக்கப் பெற்றது. அது காலை சங்கத்தின் தலைவராம் அவருக்குத் தமிழவேள் என்ற பட்டத்தினையும், அச்சங்கப் புலவராம் திரு. வேங்கடாசலம் பிள்ளையாவர்கட்குக் கவியரசு என்ற பட்டத்தையும் அருளிச் சிறப்பித்தார்கள்.

முன், த.வே.உ. பிள்ளையவர்களுக்குச் செந்தமிழ்ப்புரவலர் என்ற பட்டமளிக்கப் பெற்றதன்றோ? இப்போது, தமிழவேள் என்ற பட்டமும் சேர்ந்தது. அவரது இறுதி நாள் வரை இப்பட்டங்களை இணைத்தே அவரைக் குறிப்பிட்டது தமிழுலகம்,

கரந்தைத் தமிழ்ச் சங்க வெள்ளி விழாவிற் கெழுந்தருளித் தலைமை தாங்கி நடத்தி அரிய பெரிய கருத்துக்களைத் தெள்ளத் தெளிய விரித்துரைத்து யாவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்குமாறு செய்தருளிய நம் சுவாமிகளுக்கு அத் தமிழ்ச் சங்கம், கனமற்றதும், உறுதியுடையதும், வசதி மிக்கதுமான ஓர் மேனாவினைச் செய்தளித்தது. அம்மேனா (சிவிகை) இன்றும் மடாலயத்தில் உள்ளது.

தமிழ்க் கல்லூரிகளுக்கு வழி காட்டல் :

தாம் தொடர்புகொண்டு தம் நேர்ப்பார்வையில் 1917 முதல் தொடங்கி நடத்தப் பெற்ற ஸ்ரீ பாடலேச்சுரர் தரும பாடசாலையிற் பயின்ற பிள்ளைகள், அந்நாளைய மெட்ரிக்குலேஷன் பயின்ற பின்னர் கல்லூரியாக்கி அதனில் தமிழ்க் கல்வி கற்பிக்கத்தக்க வகை காணல் சுவாமிகளது குறிக்கோளாக இருந்தது. சில காரணங்களால் அப்பள்ளி மூடப் பெற்றது. அதனால் வருத்தமிக்க கொண்ட சுவாமிகள், 1933ல் தமக்கு அறுபானாண்டு நிறைவு விழா நடந்த போது ஓர் கல்லூரி அமைக்கவெனத் தம் சொந்தப் பொறுப்பில் பதினாயிர ரூபாய் ஒதுக்கினார்கள். கல்லூரிப் புகுமுகத் தேர்வுக்குப் படிக்க விழைந்தார் சிலரை மாணவராக அமர்த்திப் புகுமுக வகுப்பும் தொடங்கி விட்டார்கள். முன்னதாக (Advance)ச் சில வகுப்புகளில் தனித்தமிழை வளம்பெறக் கற்றவர்தான் சிறந்த தமிழறிவு