பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

9


ஆலய பூசை, இட்டடலிங்க பூசை புராண இதிகாசச் சொற்பொழிவுகள், சிறுவர்க்குக் கல்வி போதனை முதலிய சமுதாயப் பணிகள் பலவற்றை மேற்கொண்டு அவர்கள் வாழ்ந்தார்கள். தம்மைச் சுற்றியிருந்தவர்களையும் ஒழுக்க நெறியில் ஈடுபடுத்தினார்கள். இவ் உயரிய வாழ்க்கை நெறிகளை மக்களிடம் பரப்புவதற்காக அமைக்கப்பட்டதுதான் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம்.

அருள்திரு சண்முக ஞானியார் என்று போற்றப் பெரும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் இம்மடத்தின் முதல் குருநாதராக விளங்கினார். அவருக்கும், அவருக்குப் பின் மடாலயத் தலைமைப் பொறுப்பேற்ற மூவருக்கும், பின் வந்தவர்களே ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆவர். ஞானியாரடிகள் என்ற பெரும் சிறப்புப் பெற்ற அவர்கள் இம்மடத்தின் ஐந்தாம் குருமகா சந்நிதானம் ஆவார்கள்.

கும்பகோணத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள திருநாகேச்சுரம் என்ற ஊரில், வீரசைவ குடும்பத்தவருக்குக் குருவாக விளங்கிய அண்ணாமலை அய்யர், அவர்தம் துணைவியார் பார்வதியம்மை ஆகியோரின் பிள்ளையாகப் பிறந்தவர் ஞானியாரடிகள் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் பழநியாண்டி என்பதாம்.

அண்ணாமலை அய்யரும் பார்வதி அம்மையும், தங்கள் முன்னோர் கொண்ட முறைப்படி, திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் குருவாகக் கொண்டிருந்தார்கள். அடிக்கடி திருப்பாதிரிப்புலியூர் சென்று குருவை வழிபட்டுத் திரும்புவது வழக்கம்.

வீரசைவர், தம் மரபு முறைப்படி, பிள்ளைப் பருவச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றி, சிவலிங்க தாரணையும் செய்து வைக்க வேண்டும். அவ்வாறே பழநியாண்டிக்கும் எல்லாம் செய்யப்பட்டன. பிறகு தம் குருவாகிய ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்துச் சுவாமிகளிடம் சிவலிங்க தாரணம் செய்து வைப்பதற்காக, ஆறாம் மாதத்தில் குழந்தையை பெற்றோர் குருவிடம் கொண்டு வந்தனர்.

அப்போது, ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் நான்காம் குருமூர்த்தியாக மடாலயப் பொறுப்பு வகித்து வந்தார்கள். உங்கள் குழந்தை பழநியாண்டி