பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

139

நடத்தச் சொல்லிவிட்டார்கள். பள்ளி சிறப்புற நடைபெற வேண்டியே, தம் மடாலயத்திற்கெதிரே, மடாலயத்திற்குரியதாயிருந்த பரந்த இடத்தை அளித்தார்கள். அது இப்போதும் ஒரு பாடசாலை நடத்தும் இடமாக உள்ளது. ஆனால் நம் மடாலயற்திற் குரியதாயில்லை.

ஸ்ரீ பாடலேச்சுரர் தருமப் பாடசாலைக்கு, வண்டிப்பாளையம், முருகேச நகரில் வாழும் பலர் தம் பிள்ளைகளை யனுப்பினர். குறைந்த வருவாயுடையோர், வருவாயில்லா தோர்க்கெல்லாம் அப்பள்ளி ஒர்சிறந்த காமதேனுவாக இருந்தது, வாரத்தில், சனிக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் 10 மணிவரை பள்ளி நடைபெற்ற பின் அரை நாள் விடுமுறை. ஞாயிறு விடுமுறை கிடையாது. ஆனால் அமாவாசை, பெளர்ணமி, பிரதமை திதிகள் வழக்கமான விடுமுறை நாள்களாம். எல்லாப் பண்டிகைகளுக்கும் விடு முறை உண்டு. தைப் பொங்கல்தொடர்பாகச் சில நாள்களும், கோடையில் ஸ்ரீ பாடலேசப் பெருந்தகையின் பெரு விழா நாள்கள் தொடங்கி ஒரு மாதமளவும் விடுமுறைகளாகும். மாணவர் யாவரும் பாழ் நெற்றியோடு பள்ளி வரமாட்டார்கள். சைவர் திருநீறும், வைணவர் திருமண்ணும் அணிந்தே வருவர். அணியாதவரை அணிவிப்பது உண்டு. காலை, பள்ளி தொடங்குமுன், வணக்கப் பாடல்கள் பாடப்பெறும். எல்லோரும் சேர்ந்து சில பாக்களைப் பாடவேண்டும். பின்னர், பண்ணமைந்த சில தேவாரப் பாடல்களும், திருவாசக முதலாயினவும், திருப்புகழ் சந்தத் தோடும் சிலரே பாடவேண்டும். பின்னர் அரகர முழக்கம், சிவ சுப்பிரமண்ய ஓம் முழக்கங்களுடன் வகுப்பறைகட்கு மாணவர் செல்வர். பிற்பகல் தொடக்கத்தில் வடமொழித் தோத்திரங்கள் மூன்றும், குரு வணக்கமும் பாடப்பெறும். இருவேளை முடிவுகளிலும், 'வாழ்க அந்தணர்' என்ற ஏடேறிய திருப்பதிகத்து முதற் பாசுரமும், 'துய்யதோர்', ஆறிருதடந்தோள் என்ற கந்த புராண வாழ்த்துப்பாடல்களும் பாடிமுடித்து முழக்கங்களுடன் மாணவர் கலைந்து செல்வர்.

வார வழிபாடு :

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மாணவரனைவரும், முகம், கை, கால் அலம்பிக் கொண்டு, சமயக் குறிகளையணிந்து இவ்விருவர் அல்லது மும் மூவராகத் திருக் கோயிலுக்குச் சென்று வழிபாடாற்ற வேண்டும். வலம் வரும் முறை, அட்டாங்க பஞ்சாங்க நமஸ்கார முறைகள், அந்தந்தத் திருவுரு வத்தெதிரே அவ்வத் திருவுருவத்திற்குரிய பாடல் பாடுதல் முதலான நல்ல பயிற்சிகளை மாணவர் சிறு வயதிலேயே