பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

வல்லிக்கண்ணன்

அடைந்தனர். சுவாமி, பிராட்டி திருவுருவங்களுக்கு அருச்சனை செய்வித்துப் பிரசாதம் அளிக்கப் பெறும். கோயிலுக்குப் போகும் போதும், வரும்போதும் ஒரு மாணவனும் அடுத்தவனுடன் பேசக்கூடாது. இறைவன் திருவடியை மனங்கொண்டே சென்று மீள வேண்டும். பாடல்கள் கூறி வழிபடும் போதும் அப்படியே. இவையெல்லாம் முன்னதாகவே ஆசிரியர்களால் தெளிவுறுத்தப் பெறும். இதனால் தெய்வப் பற்றும் இறைவன் திருவடி நீங்காச் சிந்தனையும், கீழ்ப்படிதலும், பணிவுடைமையும், பாடல் பாடும் வல்லமையும் மாணவர்களுக்கு அமைந்தன. இந்நாள் இத்தகைய பேறுகள் வாய்க்குமோ?

மேலும், பெருவிழா, அப்பர் சுவாமிகள் கரையேறவிட்ட விழா, கட்டமுது விழா, தண்ணீர்ப்பந்தர் (அப்பூதியடிகள்) விழாக் காலங்களில் இறைவன் வெளிப்பாடு திருவீதி உலா கொண்டருளுங் காலங்களில் மாணவர் பலர் ஒருங்கே பாராயணம் செய்து கொண்டு பின்னே செல்வதும் உண்டு. விநாயகரகவல். திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா, சிவபுராண முதலாம் திரு அகவல்கள் பாராயணம் செய்யப் பெறுவன. இறுதியில் திருப்புகழ்கள் சில பாடி, வாழ்த்துக் கூறி முடிப்பார்கள்.

வாரந்தோறும் பிள்ளைகள் ஒழுங்காகத் திருக்கோயில் வழிபாடு செய்வது கண்டார், திருவாளர் ச. சச்சிதானந்தம் பிள்ளை, அவர்கள். அதனாற் பெரும் பயன் விளைவது கருதியே தான் செல்லுமிடங்களி லெல்லாம் வார வழிபாட்டி னை வற்புறுத்துவாராயினார்.

சுவாமிகள் தொடர்பு கண்ட சங்கங்கள்
அறிந்த அளவுக்குச் சில தனியாருடன் பழகியமை

1. வாணி விலாச சபை- ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
2. ஸ்ரீலஸ்ரீ- ஞானியார் மாணவர் கழகம், ஸ்ரீமத் ஞானியார் மடாலயம், திருப்பாதிரிப்புலியூர்.
3. கரந்தைத் தமிழ்ச்சங்கம், தஞ்சை
4. கோவல் தமிழ்ச் சங்கம், திருக்கோவலூர்
5. கண்டாச்சிபுரம் செந்தமிழ்க் கழகம்
6. சக்தி விலாச சபை - திருவண்ணாமலை