பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

வல்லிக்கண்ணன்

சொற்பொழிவுகளுக்குத் தலைமை தாங்கியருள் வதுண்டு. முன் குறிப்பிட்ட ஜவுளி ந. சி.முனிசாமி முதலியாரவர்கள் ஆதரவு தந்து அன்புடன் உபசரிப்பார்கள்.

7. வேத மடம், ஸ்ரீவாகீச பக்த பதசேகர சபை :

வடமட்டம், ஜமீன்தாரர் திரு. திருவேங்கடம் பிள்ளையின் ஆதரவால் நடைபெற்ற இச்சபையின் முதல் ஆண்டு நிறைவு விழா 3-1-1919முதல் மூன்று நாட்கள் சுவாமிகளின் தலைமையில் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது. அவ்விழாவிற்குப் பெருமக்கள் பலர் வந்திருந்தனர். அவ்விழாவின் இறுதிநாளில் சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். அதாவது ;

‘பிற மதம் புகுந்தோர், விரும்பினால் மீண்டும் அவரைச் சைவ சமயத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதாகும். அந்த நாளின் நிலையறிந்து மீண்டும் அவர்கள் பிற மதம் புகுந்தால் என் செய்வது? என்ற வினாவினைக் கும்பகோணம் -தமிழ்பண்டிதர் திரு. வேங்கடராம ஐயர் கொணர்ந்தார். பலர் அந்த வினாவினை ஆதரித்து, அங்ஙனம் சேர்க்க மறுப்புத் தெரிவித்துப் பேசினார். ஆனால் திரு. வி. கலியாணசுந்தர முதலியார் அவர்கள், விரும்பினால் சேர்த்துக்கொள்ளலாம்; ‘மீண்டும் புகுவரேல் அவர்களை ஒருபோதும் சேர்க்கக் கூடாது’ என்ற திருத்தத்துடன் ஆதரிக்குமாறு ஆலோசனை கூறினார். அத் தீர்மானம் அத்திருத்தத்துடன் யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பெற்று முடிவு செய்யப்பட்டது.

அந்தச் செய்தியைக் குறிப்பிட்டுத் தமது முடிப்புரையில் சுவாமிகள், திலகவதியார் புறசமயஞ்சார்ந்தும் நோய்க்கு ஆதரவு தேடித் தமக்கையிடம் வந்த தன் தம்பிக்குத் திருநீறளித்துச் சைவராக்கினார். அவர் எதையும் ஆராயாமல் ஐந்தெழுத்து ஓதித் திருநீறளித்தார். அவருடைய நம்பிக்கை வீண்போக வில்லை. இன்று நாம் சிறிதளவும் நம்பிக்கை கொள்ளாமல், ஆராய முற்பட்டு அவமே காலங் கடத்துகிறோம். ஒரு பெண் பாலவர்க்கு இருந்த நம்பிக்கை ஆண்பாலவராகிய நமக்கு இல்லாது போனதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்? என்று குறிப்பிட்டபோது பேரவை முழுதும் கையொலி ஆரவாரம் செய்தது யாவர் கண்களிலிருந்தும் ஆனந்தக் கண்ணிர் சொரிந்தது.