பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

157

சுற்றளவுள்ள தொலைவு நடக்க வேண்டுமெனச் சிலர் மறுத்தமையால் நகர்வலம் வந்து தீப தரிசனம் செய்தார்கள். ஆனால் 1941 அக்டோபர் மாதத்தில் (விஷு கார்த்திகை) தீப தரிசனத்தன்று அதிகாலை புறப்பட்டுக் காற்று மழையையும் கருதாமல் பாராயணத்துடன் மலைவலம் சூழந்தார்கள். அக்காலை அவர்கள் 68 ஆண்டுகளைக் கடந்தவர்களென்பதும், சிறிது தொலைவேனும் நடந்தறியாதவர்க ளென்பதும், பாதக்குறடு அணியாமல் வெறுங்காலுடன் நடந்து வலம் வந்தபின் மழையைப் பொருட்படுத்தாமல் கோபுரத்தின் வெளியே அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம் செய்தபின்னரே, தாம் எழுந்தருளிய விடத்திற்கு மீண்டார்க ளென்பதும் கருதத்தக்கன. இது பின் வருவோர்க்கெல்லாம் நல்வழி காட்டும் நிகழ்ச்சிகளுள் ஒன்று.

துன்பம் சுடச்சுட நோக்கிற்பவர்

யாரொருவர், நிறைந்த அன்புடன் இறைவனைத் துதிப்பதையே கடனாகக் கொள்கிறாரோ, அவர் துன்பம் அடைதலே உலகியற்கை. நல்லதற்கு இடையூறு நாற்புறமும் உண்டென்பதும் பழமொழியன்றோ? அவ்வாறே நம் அடிகளார்க்கும் சில சில உடல்நலக் கேடுகள் வந்ததும் உண்டு.

இயல்பாகவே, அவர்களுக்குச் சர்க்கரை வியாதி இருந்தது. அது அவர்களது 50 வயதிற்குமேல் பல உணவுக் கட்டுப்பாடுகளை உண்டாக்கி விட்டது.

1929ஆம் ஆண்டில் சுவாமிகள் புறமுதுகில் கட்டி (ராஜ பிளவை)யால் துன்புற நேர்ந்தது. அது மிக மிக ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்து விட்டது. அதற்கு அறுவைச் சிகிச்சை செய்தவருள் ஒருவர், சுவாமிகளிடம் மிகப் பற்றுக்கொண்ட திரு பாலவேலாயுதம் பிள்ளையவர்கள். மற்றவர் திரு. கிருஷ்ண அய்யங்கார். அறுவைச் சிகிச்சைக்கு முன்னர், அடுத்த பட்டங் குறித்து உயிலும் எழுதிவைக்கப் பெற்றுவிட்டது. ஆனால் இறையருள் நம்பால் இருந்தது. அதன்பிறகு அவர்களது சொல்லருந் தொண்டுகளால் தமிழன்னை அரியணை வீற்றிருக்க வேண்டு மென்பதற்காகவே முற்றும் நலம் கிடைத்தது. பிறகும் அவர்கள் 12 ஆண்டுகள் நமக்கெல்லாம் வழிகாட்டும் பேறுபெற்றோம்.

1932ஆம் ஆண்டில் கார்க்கூரில் ஏற்பட்ட கால்முரிவு பற்றி முன்னமே குறிப்பிடப்பட்டது.