பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

வல்லிக்கண்ணன்

உரிய சிவிகை ஊர்தல், பொதுமக்கள் அன்புடன் புரியும் உபசாரங்களையேற்று அவர்களுக்கு அருள்பாலித்தல் முதலிய நெறிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப் பிடிப்பதாகவும் குருவின் மீது ஆணையிட்டுக் கூறல் வேண்டும். அடிகளார் அனைத்தையும் உறுதிமொழிப்படி தம் வாழ்நாள் முழுவதும் நிறைவேற்றி வந்தார்.

அடிகளார் தமது உறுதிமொழிப்படி நடப்பதில் எவ்வளவு தீவிரமாக இருந்தார் என்பதற்குச்சான்றாக ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மடாலயத் தலைவர் சிவிகையில் செல்லும் மரபு பற்றியது அது.

சிவிகையில் செல்வதனால் காலதாமதம் ஏற்படுகிறது. விரைவாகப் பல இடங்களுக்குப் போய்வர இயல்வதுமில்லை. காலப்போக்கிற்கு ஏற்பவும், சூழ்நிலைகளுக்குத் தக்கபடியும் சில மரபு ஒழுக்கங்களை மாற்றிக் கொள்வதில் தவறில்லை. அடிகளார் சிவிகை ஊர்வதை விடுத்து, கார் ஒன்றினைப் பயன்படுத்துவது நல்லது. அதனால் விரைவாக குறித்த இடம் சேரமுடியும். எளிதாகப் பல இடங்கள் சென்று, பெருமளவில் மக்களுக்குத் தொண்டாற்ற வாய்ப்பு கிட்டும். இப்படிச் சிலர் அடிகளாரை வேண்டிக் கொண்டார்கள். புதுவைக் கலைமகள், கழக ஆண்டு விழாவிற்கு வருகைதந்த ஞானியாரடிகளிடம், அறிஞர்லதிரு. வி. கலியாணசுந்தரமுதலியார் இக்கோரிக்கையை அன்புடன் முன் வைத்தார்.

அதற்கு அடிகளார் புன்முறுவல் பூத்து, ஒரு கதை சொல்லி மறுத்துவிட்டார்கள். ‘யாமும் முன்னோர் கைக்கொண்ட முறைகளைப் பின்பற்றியே வந்துள்ளோம். அதனை மாற்றி நடந்தால், உள்ளத்தாற் பொய்யாதொழுகல் என்ற மறைமொழி கற்ற பயன் என்னாவது?' என்று தெளிவுபடுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சி 1913ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அதன் பிறகு ஞானியாரடிகள் பலப்பல நிகழ்ச்சிகளுக்கும் சிவிகையிலேயே சென்று வந்தார்கள். சென்னைக்கும் பலமுறை சென்று திரும்பியது உண்டு. அதனால், வழியில் உள்ள சிறு கிராம மக்களும் அடிகளைக் காணவும், அவர்களிடம் அன்பு கொள்ளவும் வாய்ப்புகள் கிட்டின. சிற் சில கிராமங்களில் மக்கள் அடிகளாரின் சொற்பொழிவைக் கேட்டு இன்புறும் பேற்றினைப் பெறவும் முடிந்தது.