பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

177

மடாலயத்தைச் செம்மைப் படுத்தவும், அழிந்து போகும் நிலையிலிருந்த தமிழைக் கொலு வீற்றிருக்கச் செய்யவும் எழுந்தருளினார்கள். அந்தத் தைப் பூசத்திலே - பழநியம் பதிச்சூழலிலே பரம் பொருளுடன் கலந்தார்கள் என்று கூறத் தயக்கம் ஏன்?

சற் புத்திர மார்க்கத்தை உலகினுக் குணர்த்த முருகக் கடவுளே - அபர சுப்ரம்மண்ய மூர்த்தியே - திருஞான சம்பந்தராக வந்தருளியமை உலகறிந்த செய்தி. அவர் திருமணக் கோலத்தோடு சோதியிற் கலந்த நாள் வைகாசி மூலத்தில் சுவாமிகளது தோற்றம்.

திருப்பாதிரிப்புலியூர்க் குருபீடங்கள் எழுந்தருளியிருக்கும் கோயிலில் இரண்டாம் குருநாதர் மூலவர், மூன்றாமவர் திருநந்தி தேவர், நான்காம் சுவாமிகள் திருச்சுற்றில் விநாயகர் இருப்பிடமான வலப்பக்க மூலை. நம் ஐந்தாம் சுவாமிகளுக்கு முருகன் எழுந்தருளும்இடம் இடப்புறத்துப் பிரகார மேற்கே. இந்தவாய்ப்பினையும் நாம் கருதுங்கால் சுவாமிகள் முருகனேயன்றி வேறல்லர் என்பதை உணர்கிறோம்.

அவர்கள் ஏற்றி வைத்த ஒளி விளக்குகள் யாண்டும் ஒளி பரப்புகின்றன. அவ்வொளி விளக்குகள் ஒவ்வொன்றினும் பற்பல விளக்குகள் ஒளிரத் தொடங்கிவிட்டன. திக்கெட்டிலும் நெடுந்தூரம் ஒளி கான்று கட்புலனாகும் திருவருணைத் திருக்கார்த்திகை விளக்கெனவே புகழ் பரவி யாவர்க்கும் கட்புலனாகாமல் தோன்றாத் துணையாகி நிற்கும் எம் சுவாமிகளின் திரு நாமம் யாண்டும் ஒலிக்க அவர் திருவுள்ளம் பரந்தவாறே தமிழமுதம் யாங்கணும் மாந்தப் பெறுக ! அவர்களது ஆன்மலிங்கக் கோயில் ஒளி வீசித் திகழ்ந்தாங்கே சிவமணம் - தமிழ் மணம் - யாண்டும் என்றும் பரவுக !

வாழ்க அவர்களது திருநாமம்
சிவசண்முக மெய்ஞ்ஞான தேசிகன் திருவடி வாழ்க.
முற்றும்