தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்
186
(ஏஸ். வையாபுரிப் பிள்ளை)
திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சிவ சண்முக மெய்ஞ்ஞான தேசிக மூர்த்திகளின் சிறப்பியல்புகளை யெல்லாம் ஒருசிறு சொற்றொடரால் அடக்கிக் கூறுதல் எளிதன்று. எனினும் அவர்களை "உண்மை ஞானி’ என்று கூறுவோ மாயின், அச்சிறப் பியல்புகளிற் பெரும்பாலனவும் அதன்கண் அடங்கி விடுமென்றே கருதுகின்றேன். இதனைக் காட்டிலும் வேறொரு தகுதியான தொடரைக் காணுதல் அரிது.
ஞானியார் சுவாமிகளைத் தரிசித்தவுடன் ஒருவனுக்கு முற்படத் தோன்றுவது அவர்களது அன்புடைமையாகும். தம்மிடம் வருபவர் யாரேயாயினும், அவர்களிடம் தமது முழு அன்பையும் காட்டி அவரவர்களுக்கு வேண்டும் நன்மொழி கூறி, அவர்களையும் தமது கருணை நோக்கினால் பரவசப்படும்படி செய்யுங் காட்சியானது ஒவ்வொருவரும் கண்டு மகிழ்தற்குரியது. காண்போர் மனத்தில் மேலெழுந்தும். அடி தாழ்ந்தும் நிலையாக உறைந்து வரும் தீக்குணங்களனைத்தும் உருத்தெரியாதபடி மறைந்து விடுகின்றன. சுவாமிகளுடைய அன்பு நம்மை அடிமையாகச் செய்து விடுகின்றது.
‘அன்பென்ப தொன்றின் தன்மை அமரரும் அறிதல் தேற்றார்" என்று கம்பர் கூறியிருப்பது எவ்வளவு உண்மையான தென்று சுவாமிகளுடைய சந்நிதியிலேயே தெரிந்து கொள்ளலாம்.
இனி இரண்டாவதாக நமக்குத் தோன்றுவது சுவாமிகள் மனமொழி மெய்களில் தூயராய் இருக்குந் தன்மை. இளம் பருவந்தொட்டே தமது வாழ்க்கையைப் பண் படுத்தி, எவ்வகையான தீய இயல்புகளும் தம்மை அணுகாதபடி பாதுகாத்து, மாசின்றி விளங்குந் திங்கள் போலச் சாந்த மூர்த்தியாய்ச் சுவாமிகள் விளங்குகின்றார்கள். அவர்களைக் காணச் செல்லும் போது சகல மங்கள குணங்களுக்கும் உறைவிடமாகிய இறைவன் இருக்கும் திருக்கோயிலுக்குச் செல்வது போன்ற ஓர் உணர்ச்சி நமக்கு உண்டாகின்றது.
மூன்றாவதாக நாம் காணும் சிறப்பியலாவது சுவாமிகளுடைய பதி ஞானமும் பத்தியுமாகும். "தெய்வமொடு நீயுறையுந் திருக் கோயில்" என்று ஆசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் கூறுகின்றார்கள். தெய்வத்தோடு உடனுறையுந் தெய்வமெனச் சுவாமிகளைக் கூறினால் அது மிகவும் பொருத்த முடைய